மும்பை: எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்துச் சிதறிய சம்பவத்தை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் 11 வழித்தடங்களில் தனது விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்தது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படுவதாகவும் மாற்றுப் பயண ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டு ஏர் இந்தியா, பயணிகளின் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் அபார் மாகாணத்தில் உள்ள ஹேலி குப்பி என்ற எரிமலை, பல்லாண்டுகளுக்குப் பின் வெடித்துள்ளது. இதனால் அங்கு மூண்டுள்ள சாம்பல் புகை வேகமாகப் பரவி வருகிறது.
இத்தகைய சாம்பல் படலம் விமானப் பயணத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடியது என்பதால், குறிப்பிட்ட பகுதியில் பறப்பதைத் தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) அறிவுறுத்தியுள்ளது.
பல நூறு மைல்களுக்குப் பரவியுள்ள சாம்பல் படலம், இந்தியாவுக்கு அருகேயும் படர்ந்துள்ளது. இது பின்னர் சீனாவுக்கும் பரவக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
நியூயார்க்-டெல்லி, துபாய்-ஹைதராபாத், துபாய்-சென்னை, தோஹா-மும்பை உள்ளிட்ட பல முக்கியமான வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்தது.
இதேபோல், ஆகாசா ஏர், இண்டிகோ, கேஎல்எம் நிறுவனங்களும் விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
எரிமலை சாம்பல் மேகங்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் வழியாகச் சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக இந்திய வானிலை மையத் தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கடல் மட்டத்திலிருந்து எட்டு முதல் 15 கிலோ மீட்டர் உயரத்தில், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில், இந்தியாவை நோக்கி சாம்பல் மேகப் படலம் வருவதாகவும் டெல்லியில் வானம் வழக்கத்தைவிடச் சற்று கூடுதலாக இருண்டு காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனினும், ஏற்கெனவே காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி மாநகரில், சாம்பல் படலத்தால் மேலும் பாதிப்பு இருக்காது என மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

