கார் சக்கரத்தில் சிக்கி தொண்டர் பலி; ஆந்திர முன்னாள் முதல்வர்மீது வழக்குப்பதிவு

1 mins read
ad1f97fb-530b-468f-b87f-0d9e09ff2d15
ஆந்திர முன்னாள் முதல்வரின் கார் சக்கரம் ஏறியதில் தொண்டர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். - படங்கள்: ஊடகம்

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் சக்கரத்தில் சிக்கி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

அவ்விவகாரத்தில், ஜெகன் மோகன் ரெட்டி, அவரின் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கார் ஓட்டுநர் ரமண ரெட்டியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பலியான தொண்டரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 18ஆம் தேதி, ஆந்திரம் மாநிலம், சட்டெனப்பள்ளி தொகுதிக்கு அம்மாநில முன்னாள் முதல்வர் வருகை தந்தார். அவரைக் காண பெருங்கூட்டம் திரண்டது. காரில் பேரணியாகச் சென்ற ஜெகனுக்கு வழிநெடுகிலும் அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தநிலையில், சாலையில் முன்வரிசையில் நின்றிருந்த தொண்டர் ஒருவர் எதிர்பாராதவிதமாக ஜெகன்மோகனின் காரின்முன் நிலை தடுமாறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் விழுந்ததை கவனிக்காமல் ஓட்டுநர் காரை இயக்கியத்தில், காரின் முன்பக்கம் அந்தத் தொண்டர்மீது ஏறியது.

அதில் அவர் உடல் நசுங்கி பலியானார். பலியான நபர் சீலி சிங்கையா என்பதும் அவருக்கு வயது 65 என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்புச் சொற்கள்