தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஹரியானா, ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்கு எண்ணிக்கை

2 mins read
c8890f69-cdaf-481b-ab2c-ded31d47360f
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று, தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும் என்றும் அதைத் தொடர்ந்து மற்ற வாக்குகள் எண்ணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. - படம்: பிடிஐ

புதுடெல்லி: ஹரியானா, ஜம்மு-காஷ்மீா் ஆகிய இரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் நாளை (அக்டோபர் 8) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் செப்டம்பர் 25 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் அக்டோபர் 1ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

மொத்த வாக்காளா்கள் கிட்டத்தட்ட 88 லட்சம் போ் என்ற நிலையில், மூன்று கட்டங்களிலும் சோ்த்து 63. 88 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அங்கு, தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி அதிகப்படியான இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

அதேபோல், 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானாவில் அக்டோபர் 5ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. கிட்டத்தட்ட 2 கோடி வாக்காளா்களைக் கொண்ட இம்மாநிலத்தில் 67.90 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் நிகழும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, அம்மாநிலங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப் படையினர் (சிஏபிஎஃப்) , மாநில ஆயுதப் படைக் காவல் துறையினர், மாவட்ட காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள், வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் டிஎஸ்பி அளவிலான அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்