இந்தியாவைப்போல அமெரிக்காவிலும் வாக்காளர் அடையாள அட்டை: டிரம்ப் விருப்பம்

இந்தியாவைப்போல அமெரிக்காவிலும் வாக்காளர் அடையாள அட்டை: டிரம்ப் விருப்பம்

2 mins read
77cc7814-3691-4257-8b4c-b5ba1ac75fd7
‘சேவ் அமெரிக்கா’ சட்டம் நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை அவசியமாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

வாஷிங்டன்: தேர்தல் மோசடிகளைத் தடுக்க இந்தியாவைப் போல அமெரிக்க வாக்காளர் ஒவ்வொருவருக்கும் நிழற்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவின் தேர்தல் முறையையும் வாக்காளர் அடையாள அட்டையையும் அவர் புகழ்ந்தார்.

அமெரிக்கத் தேர்தல்களில் வாக்களிக்கக் கடுமையான குடியுரிமை நிபந்தனைகளை வலியுறுத்தும் ‘சேவ் அமெரிக்கா’ சட்டத்தை நிறைவேற்றத் திரு டிரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

அது தொடர்பாகத் தமது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் அவர் ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

அண்மைப் பொதுத் தேர்தலில் இந்தியாவில் ஒரு விழுக்காட்டு வாக்காளர்கள்கூட அஞ்சல் வாக்குகளைப் பயன்படுத்தவில்லை என்றும் ஒவ்வொரு வாக்காளரிடமும் செல்லுபடியாகும் நிழற்பட அடையாள ஆவணம் இருந்து என்றும் திரு டிரம்ப் சுட்டிக்காட்டினார்.

“இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ‘செல்லுபடியாகும் நிழற்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல்களை நடத்த முடியும்?’ என்று அமெரிக்க நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார்,” எனத் திரு டிரம்ப் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

‘சேவ் அமெரிக்கா’ சட்டம், ஒருவரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் குடியுரிமை ஆதாரத்தைக் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.

அத்துடன், நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை அவசியமாக்க வேண்டும் என்றும் அந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.

அஞ்சல் மூலம் வாக்களிப்பதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகின்ற அம்சத்தையும் கொண்டிருக்கும் அந்தச் சட்டத்திற்கான ஆதரவைத் திரட்டும் நோக்கில் திரு டிரம்ப் இந்தியாவை உதாரணமாகச் சுட்டியுள்ளார்.

“இந்தியாவின் கடந்த தேர்தலில் 646 மில்லியன் வாக்காளர்கள் இருந்தனர். அவர்களில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே அஞ்சல் மூலம் வாக்களித்தனர். மேலும், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் நிழற்பட அடையாள ஆவணத்தைக் கொண்டிருப்பது கட்டாயமாக இருந்தது. அந்த அம்சங்களை உள்ளடக்கிய ‘சேவ் அமெரிக்கா’ சட்டத்தை நாம் இப்போதே நிறைவேற்ற வேண்டும்,” என்று திரு டிரம்ப் தமது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்