தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில், எர்ணாகுளத்தில் ஏறத்தாழ 3,000 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் தகுதியற்றவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி அதன் நிறைவுக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் ஆயிரக்கணக்கானோர் வாக்களிக்க தகுதிபெறும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறாக இறுதிக் கட்ட வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் தகுதியற்றவர்களாகக் கண்டறியப்பட்டவர்களில் ஏராளமானோர் இறந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கான அதிகாரபூர்வ கடைசி நாள் முடிவுறுவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள 14 சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2,994 பேர் வாக்களிக்கத் தகுதி பெறவில்லை. அவர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கத் தகுதியற்றவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
இன்னும் சிறிய அளவிலான பணி மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், அதன் தொடர்பில் ஏறத்தாழ 700 வாக்காளர்கள் நிலை குறித்து மட்டுமே விசாரித்து சரிபார்க்க வேண்டியுள்ளது என்றும் தேர்தல் பணி அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து 19,021 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

