புதுடெல்லி: தோ்தல்களில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்கமுடியாது என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல் 16) நிராகரித்தது.
தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும், வேண்டுமென்றே வாக்களிக்காமல் இருப்பவா்களுக்கு அரசு நலத் திட்டங்களைப் பெறுவதிலிருந்து தடை விதிக்கும் வகையில் வழிகாட்டுதலை வெளியிடத் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அஜய் கோயல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
"இது அரசின் கொள்கை சாா்ந்த விஷயம். நீதிமன்றம் இதில் உத்தரவிட முடியாது," என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறினார்.
வாக்களிப்பு விழிப்புணர்வு மூலம் ஜனநாயகம் செழிக்க வேண்டும்: நீதிபதி
"சட்ட ரீதியிலான கட்டுப்பாடுகளைக் காட்டிலும், விழிப்புணா்வில்தான் ஜனநாயகம் செழித்து வளர முடியும். சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படும், ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட இந்த நாட்டில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம். ஆனால், எவரையும் கட்டாயப்படுத்த முடியாது. தேவைப்படுவது விழிப்புணா்வுதான்," என்றார் அவர்.
மேலும், தோ்தல் நாளில் நீதிபதிகள் உட்பட பல குடிமக்களும் பணிபுரியவேண்டிய அவசியம் உள்ள நிலையில், வாக்களிப்பதைக் கட்டாயமாக்கச் சட்டம் கொண்டுவருவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது என்றார் அவர்.
“மனுதாரா் மத்திய அரசை அணுகி தனது கோரிக்கைக்குத் தீா்வு காணலாம்,” என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து உத்தரவிட்டார்.

