கேரளத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வாக்குப்பதிவு இல்லை

கேரளத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வாக்குப்பதிவு இல்லை

2 mins read
d44f7213-730f-491d-bb83-b72ee7b6dfab
கேரளத்தின் மலப்புரம் அரசு பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காகக் காத்திருந்த பெண்கள். - படம்: மாத்ருபூமி
multi-img1 of 2
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: கேரளச் சட்டமன்றத் தேர்தலில் 85 விழுக்காட்டிற்குமேல் வாக்குகள் பதிவாகும் எனத் தேர்தல் ஆணையம் எதிர்பார்த்த நிலையில், இறுதி நிலவரம் அதற்கு மகிழ்ச்சி தருவதாக இல்லை.

கேரளத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 9) சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அங்கு 78.27 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

பாலக்காடு, கோழிக்கோடு என இரு மாவட்டங்களில் மட்டுமே வாக்குப்பதிவு 80 விழுக்காட்டைத் தாண்டியது. ஆகக் குறைவாக, பத்தனம்திட்டாவில் 70.76 விழுக்காட்டு வாக்குகள் பதிவாயின.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு இடம்பெற்ற முதல் தேர்தல் இது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 2.461 மில்லியன் வாக்காளர்கள்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

கடந்த சட்டமன்றத் தேர்தலை ஒப்புநோக்க, இம்முறை நகர்ப்பகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்ததாக மாத்ருபூமி ஊடகச் செய்தி தெரிவித்தது.

எர்ணாகுளம் தொகுதியில் கடந்த தேர்தலைவிட இம்முறை 30,800 வாக்குகள் குறைவாகப் பதிவாயின. அதுபோல, திருக்காக்கரை, திருப்புனித்துறை, கொச்சி ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறிப்பிடத்தக்க அளவு குறைந்தது.

இருப்பினும், ஒட்டுமொத்தத்தில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலைவிட வாக்குப்பதிவானது இம்முறை இரண்டு விழுக்காட்டுப் புள்ளிகளுக்குமேல் அதிகமாக இருந்தது.

மொத்தம் 140 தொகுதிகளுக்கான தேர்தலில் இம்முறை மும்முறைப் போட்டி நிலவுகிறது. ஆளும் இடதுசாரி முன்னணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறது. அதனை எதிர்த்து, காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் களத்தில் உள்ளன.

அசாமில் 85%, புதுச்சேரியில் 89%

இதனிடையே, வியாழக்கிழமை அசாமிலும் புதுச்சேரியிலும் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அசாமில் 85.91 விழுக்காட்டு வாக்குகளும் புதுச்சேரியில் 89.87 விழுக்காட்டு வாக்குகளும் பதிவாயின.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவே ஆக அதிக வாக்குப்பதிவு விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அசாமில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை இடம்பெறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

மே 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்