கோவை: சம்பளம் முறையாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதைக் கண்டித்து கோவை செம்மொழிப் பூங்கா ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
செம்மொழிப் பூங்காவைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், தோட்ட ஊழியர்கள், காவலர்கள் என 250க்கும் மேற்பட்டோர் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அவர்களில் பலர் பெண்கள்.
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) காலை முதல் வேலைக்கு வந்த ஊழியர்கள் வேலை செய்யாமல் சீருடை அணிந்தபடி தரையில் அமர்ந்து தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டம் தொடர்பாக ஊழியர்கள் கூறும்போது, “கோவை மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாதம் 20,000 ரூபாய் ஊதியம் என்று கூறினார்கள். ஆனால், பல்வேறு பிடித்தம் போக 16,000 ரூபாய் மட்டும் கொடுக்கிறார்கள்.
“ஜூலை மாதம் 14ஆம் தேதிதான் ஊதியம் கொடுத்தார்கள். இந்த மாதம் இதுவரை ஊழியர்களுக்கு ஊதியம் தரவில்லை. அதனால் எங்களுக்குச் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. எனவேதான் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என்றனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும் மாநகராட்சி அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் செவ்வாய்க்கிழமை காலை அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் செம்மொழிப் பூங்கா பார்வையாளர் வருகையில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் போராட்டத்தை முடித்து வைப்பதில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.
கோவை, காந்திபுரத்தில் மத்திய சிறைச்சாலை அருகே மாநகராட்சி சார்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பூங்காவில் நூலகம், குழந்தைகள் விளையாடும் இடங்கள், மூலிகைத் தோட்டங்கள் மற்றும் ஏராளமான தாவரங்களும் மரங்களும் உள்ளன.
அவற்றைச் சுற்றிப் பார்க்க தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.


