புதுடெல்லி: திருப்பதியை தனி மாநிலமாக அறிவிக்கும்படி கோரியிருந்த மனுதாரர் ஒருவரின் பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்திருப்பதாகக் கூறி அண்மையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓர் புயலைக் கிளப்பிவிட்டார்.
இவ்விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்றும் முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் திருப்பதியை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறி கே.ஏ. ராகுல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
“ஏற்கெனவே, லட்டு தொடர்பாக விசாரணையைத் தொடங்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
“மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால், அனைத்து கோயில்கள் மற்றும் குருத்வாராக்களுக்கு என தனித் தனி மாநிலங்களை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
“மொத்தம் 30 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள திருப்பதிக்காகத் தனி மாநிலம் அமைப்பது என்பது எப்படி சாத்தியமாகும்?” என்று குறிப்பிட்டு, மனுதாரரின் கோரிக்கைகளைத் தள்ளுபடி செய்தனா்.