புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது எட்டுப் பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
இச்சம்பவம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) காலை நிகழ்ந்தது. சம்பவம் குறித்து காலை 9.16 மணிக்குத் தீயணைப்புப் பிரிவுக்குத் தகவல் வந்தது.
காவல்துறைக் குழுக்களுடன் மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக டெல்லி தீயணைப்புச் சேவை கூறியதாக என்டிடிவி ஊடகம் தெரிவித்தது. சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
டெல்லியில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேரத்தில் டெல்லியில் 100 மிலிமீட்டர் வரை மழை நீர் உயர்ந்தது. வானிலைப் பிரிவு வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல் தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை காலை டெல்லி வெப்பநிலை 23.8 டிகிரி செல்சியசாகப் பதிவானது. அது, அங்குப் பதிவாகும் சராசரி வெப்பநிலையைவிட 3.2 டிகிரி குறைவாகும்.