அமிர்தசரஸ்: அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டோரில் இருவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள்.
சந்தீப், பிரதீப் என்னும் அவ்விருவரை சனிக்கிழமை (பிப்ரவரி 15) பஞ்சாப் காவல்துறை கைது செய்தது.
உறவினர்களான அந்த இருவர் மீதும் பஞ்சாப் மாநிலம் பட்டியாலா மாவட்டத்தில் உள்ள ராஜபுராவில் கடந்த 2023ஆம் ஆண்டு கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
அந்த வழக்கு தொடர்பாகக் காவல்துறை அந்த இருவரையும் தேடி வந்தது.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு அமெரிக்க ராணுவ விமானத்தில் வந்திறங்கிய 116 சட்டவிரோத இந்தியக் குடியேறிகளில் அந்த இருவரும் இருந்தது காவல்துறையின் கவனத்துக்கு வந்தது.
உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடங்கி உள்ளது.
அமிர்தசரஸில் வந்திறங்கிய 116 இந்தியர்களில் 60 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், 30 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, மூன்றாவது கட்டமாக அமெரிக்கா வெளியேற்றிய 157 பேர் ஞாயிறு (பிப்ரவரி 16) இரவு இந்தியா வந்து சேர்வர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.