மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்: 4.26 லட்சம் பேர் இந்தியா வருகை

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்: 4.26 லட்சம் பேர் இந்தியா வருகை

2 mins read
bd3729cc-7be2-4ef8-b32c-07b696740018
மார்ச் 3ஆம் தேதி, ஜெட்டாவில் தவித்த இந்தியப் பயணிகள் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர். - கோப்புப்படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றத்திற்கு மத்தியில், ஈரானில் சிக்கியிருந்த 717 இந்திய மாணவர்கள் உட்பட மொத்தம் 1,043 இந்தியர்கள் பாதுகாப்பாக அண்டை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, வளைகுடா நாடுகளுக்கான இந்திய வெளியுறவு அமைச்சின் கூடுதல் செயலாளர் அசிம் ஆர் மகாஜன் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார்.

மேலும், “ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன், 717 மாணவர்களும் 326 இதர இந்தியக் குடிமக்களும் நிலப்பரப்பு வழியாக ஆர்மீனியா, அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா திரும்புவர்,” என்றார் அவர்.

பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து இதுவரை மேற்கு ஆசிய வட்டாரத்திலிருந்து மொத்தம் 4.26 லட்சம் பயணிகள் இந்தியா திரும்பியுள்ளனர்.

அவர்களை மீட்பதற்காக இந்திய அரசும் வெளிநாட்டு நிறுவனங்களும் இணைந்து இதுவரை 2,149 விமானங்களை இயக்கியுள்ளன. அதில் வளைகுடா நாடுகளிலிருந்து இயக்கப்படும் வழக்கமான, சிறப்பு விமானங்களும் அடங்கும்.

வளைகுடா வட்டாரத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் வசித்துவரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பிற்கு இந்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் திரு அசிம் கூறினார். இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் ஜோர்தான் வழியாகவும் குவைத், பஹ்ரேனில் உள்ளோர் சவூதி அரேபியா வழியாகவும் இந்தியா திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, மார்ச் 18ஆம் தேதி ரியாத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த இந்தியரின் உடல் மார்ச் 25ஆம் தேதி இந்தியா கொண்டுசெல்லப்பட்டது. ஓமான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் காணாமல் போன, உயிரிழந்த பிற இந்தியர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க அந்தந்த நாட்டு அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகங்கள் தொடர்பில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்