புதுடெல்லி: அமெரிக்காவின் ஆதரவுடன் ஈரான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இதனால், கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு அந்நாடுகளுக்கு பாசுமதி அரிசியை அனுப்ப கப்பல்கள் கிடைப்பதில் இந்திய ஏற்றுமதியாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாக அனைத்து இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கப்பல் போக்குவரத்தில் அதிகரித்துவரும் நெருக்கடி காரணமாக, இந்தியா முழுவதும் உள்ள துறைமுகங்களில் கிட்டத்தட்ட 181,400 முதல் 226,800 டன்கள் வரையிலான பாசுமதி அரிசி தேக்கமடைந்துள்ளது என அச்சங்கத்தின் தலைவர் சதீஷ் கோயல் புளூம்பெர்க்கிடம் கூறினார்.
மேலும், தற்போதைய சூழலில் கப்பல்களை முன்பதிவு செய்வது மிகவும் கடினமாகிவிட்டதாகவும் மார்ச் 2ஆம் தேதி அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.
துறைமுகங்களில் அரிசியைத் தேக்கி வைப்பதற்காக ஒதுக்கப்படும் இடங்களின் வாடகையை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இந்தத் தாமதத்தால் ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் திரு கோயல் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய பாசுமதி அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் அளவில் வர்த்தகம் நடைபெறும் மிக முக்கியமான சந்தையாக மத்திய கிழக்கு நாடுகள் விளங்குகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளைத் தொற்றியுள்ள போர்ப் பதற்றத்தால், கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சரக்குக் கட்டணம், காப்புறுதிச் செலவு ஆகியவை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இது ஏற்றுமதியாளர்களின் லாபத்தைக் குறைப்பதோடு, இறக்குமதி செய்யும் நாடுகளில் உணவுப் பொருள்களின் விலையையும் உயர்த்தும் அபாயம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கத் தரவுகளின்படி, டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 5.1 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான 4.26 மில்லியன் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

