போரால் நீண்ட காலப் பாதிப்பு ஏற்படும்: பிரதமர் மோடி

போரால் நீண்ட காலப் பாதிப்பு ஏற்படும்: பிரதமர் மோடி

2 mins read
இந்தியப் பொருளியல் வலுவாக உள்ளது என்கிறார் பிரதமர் மோடி
6b2b26f8-1915-4027-9fba-66f037bbfb09
வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்குத்தான் அரசு முன்னுரிமையளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். - படம்: பிஐபி

புதுடெல்லி: மத்திய கிழக்கில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர், நீண்ட காலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையை அடுத்து மாநிலங்களவையிலும் மத்திய கிழக்குப் போரால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து அவர் உரையாற்றினார்.

தற்போது நடந்து வரும் போர், உலகப் பொருளியல் அடித்தளத்தை உலுக்கியுள்ளதாக திரு மோடி எச்சரித்தார். எரிசக்தி தட்டுப்பாடு, வர்த்தகப் பாதை முடக்கம் குறித்து அவர் தனது கவலையைப் பதிவு செய்தார்.

“இந்தப் போர் உலக அளவில் கடுமையான எரிபொருள் சிக்கலை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உர விநியோகம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும், நமது பொருளியலின் அடிப்படை வலுவாக உள்ளது. நிலைமையைச் சமாளிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது,” என்றார் பிரதமர் மோடி.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்குத்தான் அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் ஹோர்முஸ் நீரிணையில் நிறுத்தப்பட்டுள்ள பல கப்பல்களில் ஏராளமான இந்திய மாலுமிகள் சிக்கி உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரச தந்திர நடவடிக்கை மூலம் போர்ச் சூழலிலும் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்ய முயன்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், மத்திய கிழக்கு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர்கள் வாழ்வதாகக் கூறினார்.

இந்தியர்களின் உயிர், வாழ்வாதாரங்கள் குறித்து இந்தியா கவலைப்படுவதாக திரு மோடி தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை, அரசதந்திர நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைக்குரிய பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதே இலக்கு என்றும் பதற்றத்தைத் தணிப்பது, ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும், ஹோர்முஸ் நீரிணை போன்ற அனைத்துலக கடற்பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் திரு மோடி.

பொது மக்கள், பொது இடங்களில் உள்ள உள்கட்டமைப்புகள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து சார்ந்த உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டித்துள்ளது.

“போர் போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற நடவடிக்கையை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பதற்றமான சூழலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்தியுள்ளது,” என்றார் பிரதமர் மோடி.

குறிப்புச் சொற்கள்