தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்சரிக்கை: ஏர் இந்தியாவின் உரிமம் ரத்து செய்யப்படலாம்

2 mins read
cfd34c46-8604-4fbc-9161-3279dc37c824
கோப்புப்படம்: - ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படலாம் அல்லது மீட்டுக்கொள்ளப்படலாம் என்று இந்தியாவின் பொது விமானத்துறைத் தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) எச்சரிக்கை விடுத்திருப்பதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

விமானிகளை எந்த வேளைகளில் பணியில் ஈடுபடுத்துவது என்பதற்கான திட்டத்தை வரைவது போன்ற நடவடிக்கைகளில் பலமுறை மோசமான விதிமீறல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஊழியர்கள் மூவரைப் பணியிலிருந்து விலக்கவேண்டும் என்று ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்ட பிறகு டிஜிசிஏ இந்த எச்சரிக்கையை விடுத்தது. சூரா சிங், பிங்கி மிட்டல், பாயல் அரோரா ஆகிய மூவரை உடனடியாகப் பணியிலிருந்து நீக்குமாறு டிஜிசிஏ உத்தரவிட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்திருந்தது.

செயல்பாட்டுக் குறைபாடுகளுக்குக் காரணமான முக்கிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருந்தது கவலைக்குரியது என்று டிஜிசிஏ வெள்ளிக்கிழமை (ஜூன் 20) வெளியிட்ட உத்தரவு ஆணையில் குறிப்பிட்டிருந்தது.

இம்மாதம் 12ஆம் தேதியன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேரைப் பலிவாங்கிய அவ்விபத்தைத் தொடர்ந்து ஏர் இந்தியா அதிகக் கண்காணிப்புக்கு உள்ளாகிவருகிறது. அகமதாபாத் சம்பவம் குறித்து விமான விபத்து விசாரணை அமைப்பு விசாரணை நடத்திவருகிறது.

தனது இந்த அமலாக்க நடவடிக்கைக்கு டிஜிசிஏ, அகமதாபாத் விபத்தைத் தொடர்புபடுத்தவில்லை. எனினும், இந்துஸ்தான் டைம்ஸ் பார்த்த ஆவணங்களில் ஏர் இந்தியாவிடம் டிஜிசிஏ கூடுதல் கடுமையாக நடந்துகொள்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிசிஏயின் உத்தரவுக்கு இணங்க சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகளைப் பணியிலிருந்து தாங்கள் விலக்கியிருப்பதாக ஏர் இந்தியா பதிலளித்தது. தற்போதைக்கு தங்கள் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி, சம்பந்தப்பட்டப் பணிகளை நேரடியாக வழிநடத்துவார் என்று ஏர் இந்தியா அறிக்கையில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்