பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் பாதிப்பு என எச்சரிக்கை

2 mins read
9c414811-5014-4400-8d5e-51a4813b745b
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை அறிவியலாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன். - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லாரும் பருவநிலை மாற்ற பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை அறிவியலாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகளையும் பாலினப் பிரச்சினை மற்றும் பொருளியல் நிலைத்தன்மையையும் ஆராய அமைச்சர்நிலைக் குழு மற்றும் அனைத்துலக ஒத்துழைப்புக்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ‘பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அஸர்பைஜானில் நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி நடைபெறும் 29வது ஐநா பருவநிலை (சிஓபி29) மாநாட்டின் தொடர்பில் திருவாட்டி சவுமியாவின் பேட்டி இடம்பெற்றது.

“பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட எல்லாருமே அதிக வெப்பத்திற்கும் நோய்ப்பரவலுக்கும் ஆளாகக்கூடிய நிலை உள்ளது.

“பெண்களைப் பொறுத்தவரை, கிராமப்புறங்களில் சமையலுக்கு விறகுகளையும் மரக்கட்டைகளையும் தொடர்ந்து பயன்படுத்தும் போது அவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

“இப்படிப்பட்ட நிலையில், தூய்மை எரிசக்திக்கு ஒவ்வொருவரும் மாற வேண்டும் என்பதே முன்னுரிமையாக உள்ளது.

“இது, உள்புறக் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களை மட்டும் குறைக்காது. இந்தியாவின் கரிமப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனபது நீடித்த நிலைத்தன்மைக்கான முக்கிய படி.

“பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் வேறுபட்டவை. காற்று மாசு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படுவது முதல் வேளாண்மை சுழற்சி பாதிக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் வரையிலான பாதிப்புகள் அவை.

இதற்கிடையே, வளரும் நாடுகள் பருவநிலை மாற்றச் சவால்களை சமாளிக்கவும் பாரிஸ் ஒப்பந்த இலக்குகளை அடையவும் 2030ஆம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் திரட்டுவது குறித்து மாநாடு கவனம் செலுத்த வேண்டும் என யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பருவநிலை நிதி தொடா்பான உயா்நிலை நிபுணா் குழுவின் புதிய அறிக்கையில் அந்தப் பரிந்துரை இடம்பெற்று உள்ளது.

குறிப்புச் சொற்கள்