புதுடெல்லி: தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்ற இந்திய இளையர்கள் மூவர், அங்கு சிலரால் கடத்தப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, தாய்லாந்து செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தமிழக ஊடகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
கடத்தப்பட்ட மூன்று இந்தியர்களும், தாய்லாந்து சுற்றுலாவிற்கு ஏறக்குறைய ரூ.2 லட்சம் செலுத்தியதாகவும் கடந்த ஜூலை 21ஆம் தேதி பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தைச் சென்றடைந்ததாகவும் தெரிகிறது.
அங்கு மூவரிடமும் தங்களைச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், அவர்களை விமான நிலையத்திலிருந்து காரில் பட்டாயாவுக்கு அழைத்துச் சென்றனர்.
அதையடுத்து, இருசக்கர வாகனத்தில் பாங்கு லாமுங் என்ற பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அங்கு மூவரையும் கட்டிப்போட்டு சித்திரவதை செய்யத் தொடங்கியதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரூ.70 லட்சம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம் என்று மூவரையும் மிரட்டிய கடத்தல்காரர்கள், கைப்பேசி காணொளி அழைப்பின்மூலம் தொடர்புகொண்டு அவர்களின் குடும்பத்தாருக்கும் மிரட்டல் விடுத்தனர்.
கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தாரில் ஒருவர், அந்தக் காணொளி அழைப்பைத் தமது கைப்பேசியில் பதிவுசெய்தார்.
பின்னர், காணொளி ஆதாரத்துடன் தாய்லாந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
புகாரின் பேரில் விரைவாக நடவடிக்கை மேற்கொண்ட தாய்லாந்துக் காவல்துறையினர், மூன்று பேரையும் மீட்டனர்.
கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட பாகிஸ்தானிய ஆடவர் ஒருவர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.
அவர் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்.
இதனிடையே, தங்களைக் கடத்திச் சென்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒருவார காலம் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக, கடத்தப்பட்ட இந்திய இளையர்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
“எங்களுக்கு உணவு வழங்கப்படவில்லை, கழிவறை செல்லவும் அனுமதிக்கவில்லை. அவ்வப்போது தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு சரமாரியாக அடித்தனர்,” என்று அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
இதையடுத்து, நல்ல பயண முகவர்களை அணுகி, நல்ல பயணத் திட்டங்களுடன் தாய்லாந்துக்கு வருமாறு பட்டாயா காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


