நூதனமான லிங்க்ட்இன் மோசடி குறித்து எச்சரிக்கை

2 mins read
314027d1-911d-4ca9-9441-7a6e384ab643
வாரம் $20 வழங்கத் தயாராக இருப்பதாக மோசடிப் பேர்வழி பெண்ணிடம் கூறியிருந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூரு: ஒருவரது தனிநபர், நிதி விவரங்களைத் திருடுவதற்கு மோசடி நபர்கள் புதுமையான வழிகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு, பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தமக்கு வந்த வித்தியாசமான ஒரு கோரிக்கை குறித்து இணையத்தில் பதிவிட்டார்.

தமது லிங்க்ட்இன் கணக்கை வாடகைக்கு விட முடியுமா என்றும் வாரத்திற்கு $20 வழங்கப்படும் என்றும் ஒருவர் அந்தப் பெண்ணுடன் தொடர்புகொண்டு கேட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கான காரணமோ நோக்கமோ அறியப்படவில்லை. ‘வாடகைக்கு விடுவது’ என்றால் என்ன என்று அந்தப் பெண் தெளிவுபடுத்தக் கேட்டபோது கோரிக்கையை விடுத்த அந்த மர்ம நபர் அதற்கும் ஒரு பதில் வைத்திருந்தார்.

சந்தையில் நண்பர் ஒருவர் தமது அமைப்பை விரிவுபடுத்தச் சில லிங்க்ட்இன் கணக்குகள் தேவைப்படுவதாக அந்த நபர் கூறியிருந்தார்.

இவ்வாறு வாடகைக்கு விட்டால் பணம் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அந்த மர்ம நபர், பாதுகாப்பு தொடர்பான தகவலை அல்லது அடிப்படைத் தரவுகளைப் பெண் மாற்றக்கூடாது என்ற நிபந்தனையையும் முன்வைத்தார்.

லிங்க்ட்இன் மூலம் பெண்ணுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து எவ்வித மாற்றமும் செய்யப்படாது. ஆனால், பெண்ணின் பயனர் அடையாளமும் கடவுச்சொல்லும் தேவை என்று கோரப்பட்டது.

பெண்ணின் பதிவைக் கண்டு மற்றோர் இணையவாசியும் தமக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பகிர்ந்துகொண்டார்.

“லிங்க்ட்இன்வழி என்னோடு தொடர்புகொண்டு வேலைக்கு ஆள் சேர்க்கும் முகவராகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர், வேலையில் சேருமாறு பலமுறை என்னைக் கேட்டதுடன் எனது வங்கி விவரங்களையும் அனுப்பி, 15-20 நிமிடப் பயிற்சியில் சேரச் சொன்னார். சிறிது நேரங்கழித்து லிங்க்ட்இன் தளத்துக்கு நான் மீண்டும் வந்தபோது அந்த நபரின் கணக்கு அகற்றப்பட்டிருந்தது. நல்ல வேளை!” என்று அந்த இணையவாசி பதிவிட்டிருந்தார்.

மோசடி மூலம் மக்களின் கணக்குகளை ஊடுருவ இது மிகவும் வெளிப்படையான ஒரு வழியாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்