கோல்கத்தா: மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் விதிமீறல்கள் நடைபெற்றதாகத் தெரியவந்தால், மறுதேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி முதற்கட்டமாகவும் ஏப்ரல் 29ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தலின்போது வன்முறைச் சம்பவங்கள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் மேற்கு வங்கமும் ஒன்றாகும். இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இதுவரை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அம்மாநிலக் காவல்துறை கூறியுள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவின்போது விதிகளை மீறினால் புகாருக்கு உள்ளாகும் இடங்களில் மறுதேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாக்குச்சாவடி அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உரிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதன்முறையாக மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ஏற்பாட்டின் மூலம் வாக்குப்பதிவு முழுவதும் நேரலையாகத் தேர்தல் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
தேவையின்றி கேமராக்கள் அணைக்கப்பட்டாலோ, திடீரென செயலிழந்தாலோ அவை சந்தேகத்துக்குரிய நடவடிக்கையாகக் கருதப்பட்டு, குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுதேர்தலுக்கு உத்தரவிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, எச்சரிக்கையாக இருக்குமாறு அது அறிவுறுத்தி இருக்கிறது.

