பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்தடிப்பாளர் ராபின் உத்தப்பாவுக்கு வருங்கால வைப்பு நிதி (PF) மோசடி தொடர்பில் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிரடியான பந்தடிப்பிற்குப் பெயர்பெற்ற ராபின் உத்தப்பா, கிரிக்கெட்டில் மும்முரமாகச் செயல்பட்ட காலத்திலிருந்தே ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றையும் நிர்வகித்ததாகக் கூறப்படுகிறது.
கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த அவர், பெங்களூரில் உள்ள சென்டாரஸ் லைஃப் ஸ்டைல் பிராண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதிக்காகப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையை முறையாக வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, வருங்கால வைப்பு நிதியின் வட்டார ஆணையர் சடாக்சரி கோபால், கர்நாடக மாநிலம் புலகேசிநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், ‘பிஎஃப்’ முறைகேட்டில் ஈடுபட்ட ராபின் உத்தப்பா, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 2,336,000 ரூபாயை ஆணையத்திடம் செலுத்தவில்லை எனக் குற்றம் சாட்டியதுடன் இதன் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளார்.
புகாரின் பேரில் உத்தப்பாவுக்கு எதிராக டிசம்பர் 4ஆம் தேதி கைதாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் துபாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், டிசம்பர் 27ஆம் தேதிக்குள் முறைகேடு செய்த பணத்தை அவர் ஆணையத்திடம் முழுமையாகச் செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன் மீதான கைதாணை குறித்து ராபின் உத்தப்பா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அதில், “ஸ்ட்ராபெரி லென்செரியா பிரைவேட் லிமிடெட், சென்டவுரஸ் லைப்ஸ்டைல் பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பெர்ரிஸ் பேஷன் ஹவுஸ் உடனான எனது தொடர்பு குறித்து விளக்கமளிக்க விரும்புகிறேன். 2018-19 ஆம் ஆண்டில், நான் இந்த நிறுவனங்களுக்குக் கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.
“இருப்பினும், நான் நிர்வாகப் பொறுப்பிலோ அந்நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், வர்ணனையாளர் என்ற வகையில், அந்நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்கேற்க எனக்கு நேரமும் நிபுணத்துவமும் இல்லை. உண்மையில், இன்றுவரை நான் நிதியளித்த வேறு எந்த நிறுவனங்களிலும் நிர்வாகப் பொறுப்பில் இல்லை,” என்றார் அவர்.
வருந்தத்தக்க வகையில், இந்த நிறுவனங்கள் நான் கடனாகக் கொடுத்த நிதியைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதால், சட்டபூர்வ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு என்னை இட்டுச்சென்றது. நானும் பல ஆண்டுகளுக்குமுன் இயக்குநர் பதவியைவிட்டு விலகிவிட்டேன்.
வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நிலுவைத் தொகையைச் செலுத்தக் கோரி உத்தரவு அனுப்பியபோது, தனது சட்டக் குழு பதிலளித்ததாக அவர் சொன்னார்.
முழுமையான உண்மையைத் தயவுசெய்து முன்வைக்கவும் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும் உத்தப்பா கேட்டுக்கொண்டார்.
2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் உத்தப்பா இடம்பெற்றிருந்தார்.
அனைத்துலகப் போட்டிகளில் முத்திரை பதித்த அவர், ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு, கோல்கத்தா, சென்னை அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
உத்தப்பா இந்தியாவுக்காக 46 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.