மும்பை பெருநகரில் எங்கும் தண்ணீர்; கிராமப்புறங்களில் துளியளவும் இல்லை

2 mins read
36bbb139-17cc-45a4-8204-6810758d1020
கிராம மக்கள் கிணற்றிலிருந்து நீர் இறைத்து வருவதற்கிடையே தண்ணீர்த் தட்டுப்பாட்டுப் பிரச்சினையைத் தொடர்ந்து எதிர்நோக்குகின்றனர். - படம்: ஏஎஃப்பி

மும்பை: இந்தியாவின் நிதி மையமாகத் திகழும் கவர்ச்சிமிகு மும்பை தலைநகர் ஒருபுறம். அந்தப் பெருநகருக்குக் குடிநீர் வழங்கும் பகுதிகளில் வறுமைப் பிடியில் உள்ள கிராமங்களில் நீர் வற்றிய நிலை மறுபுறம்.

இந்த நெருக்கடி தொடர்ந்து நாடளவில் நடந்துகொண்டே தான் இருக்கிறது என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.

“மும்பை மக்கள் எங்களின் தண்ணீரைக் குடிக்கின்றனர். ஆனால் அரசாங்கம் உட்பட அங்குள்ள எவருமே எங்களையோ எங்களின் தேவைகளையோ கவனிப்பதில்லை,” என்று துர்நாற்றம் வீசிய நீரைத் தலையில் ஓர் உலோகக் குடத்தில் சுமந்தபடி தூக்கிச் சென்ற திருவாட்டி சுனிதா பாண்டுரங் சட்கிர் கூறினார்.

மக்கள் பலமுறை நீர் நிறைத்துத் தண்ணீர்க் குடங்களைச் சுமந்து செல்ல வேண்டியுள்ளது.
மக்கள் பலமுறை நீர் நிறைத்துத் தண்ணீர்க் குடங்களைச் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. - படம்: ஏஎஃப்பி

உலகின் ஆக அதிக மக்கள்தொகையான சுமார் 1.4 பில்லியன் பேரைக் கொண்ட நாட்டில் தேவை அதிகரித்து வந்தாலும் அதற்கான இருப்பு குறைந்துகொண்டே வருவதாகக் கூறப்படுகிறது.

மும்பைக்கான பெரும் உள்கட்டமைப்பில் நீர்த்தேக்கங்கள் அடங்கும். அவை கால்வாய்களாலும் குழாய்களாலும் இணைக்கப்பட்டு சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நீரைக் கொண்டு வருகின்றன.

இருப்பினும், அடிப்படைத் திட்டமிடுதலே ஒரு தோல்வி என்கின்றனர் நிபுணர்கள்.

வட்டாரத்திலும் அருகிலுள்ள பல மாவட்டங்களிலும் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுடன் இந்தக் கட்டமைப்பு பெரும்பாலும் இணைக்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டினர்.

இந்தக் கிராமங்கள் கிணறுகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

தேவை அதிகப்படியாக இருப்பதால் முக்கிய நிலத்தடி நீர்நிலைகளும் குறைந்துவருகின்றன.

“தண்ணீரை எடுப்பதைப் பற்றிய சிந்தனையிலேயே எங்களின் நாள்களும் வாழ்க்கையும் நகர்கின்றன. ஒருமுறை தண்ணீரை எடுத்த பிறகு அதை மீண்டும் மீண்டும் எடுக்க வேண்டியுள்ளது,” என்றார் திருவாட்டி சட்கிர். நான்கு முதல் ஆறு முறை சென்று தண்ணீர் எடுத்து வருவதால் வேறு எதற்குமே நேரம் இல்லை என்றார் அவர்.

கிணறு வற்றும்போது அவ்வப்போது விநியோகிக்க வரும் அரசாங்க டேங்கரை கிராமங்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது.

மக்கள் குளிக்கும், விலங்குகள் மேயும் ஆற்றிலிருந்து சுத்திகரிக்கப்படாத நீரை அந்த டேங்கர் ஏற்றி வரும். அந்த நீரால் மக்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும் உண்டு. இருப்பினும் அது மட்டுமே கிராம மக்களுக்கு ஒரே தெரிவு.

ஆனால், மும்பை நீரின் 60 விழுக்காட்டை வழங்கும் பிரதான நீர்த்தேக்கங்களுக்கான மூலமும் இந்தக் கிராமங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ளதாக உள்ளூர் அரசாங்க அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் தாங்கள் கடப்பாடு கொண்டுள்ளதாக மாநில அளவிலும் புதுடெல்லியிலும் அரசாங்கத்தைச் சேர்ந்தோர் கூறி, தண்ணீர் நெருக்கடியைச் சமாளிக்கப் பல திட்டங்களை அறிவித்தும் உள்ளனர்.

இருப்பினும், இந்தத் திட்டங்கள் தங்களை இன்னும் வந்தடையவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

குறிப்புச் சொற்கள்