இயல்புநிலைக்குத் திரும்பிய டெல்லி நீர் விநியோகம்

1 mins read
யமுனை ஆற்றின் நீரில் அமோனியாவின் அளவு குறைந்துள்ளது
60f4f364-a1a5-4361-928e-8ac09e8449f9
யமுனை ஆற்றில் அமோனியா அளவு அதிகமாக இருந்தது. - படம்: டெக்கான் குரோனிக்கல்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை (ஜனவரி 24) மாலை நீர் விநியோகம் இயல்புநிலைக்குத் திரும்பியதாக அப்பகுதியில் நீர் விநியோகத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அரசாங்க அமைப்பான டெல்லி ஜால் வாரியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய நீர் சுத்திகரிப்பு ஆலையில் அமோனியா அளவு அதிகமாக இருந்ததால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இப்போது யமுனை ஆற்றில் அமோனியா குறைந்து வருவதால் நிலைமை சீராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்வாயைக் கொண்டு செயல்படும் ஹைடர்பூர், பவானா, துவாரகா, நங்குலோய் ஆகிய இடங்களில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலைகள் தற்போது முழுவீச்சில் இயங்குவதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. சந்திரவால், ஓக்லா நீர் சுத்திகரிப்பு ஆலைகளும் முழுமையாக இயங்குகின்றன.

சனிக்கிழமை இரவு நிலவரப்படி வாஸிராபாத் ஆலை 85 விழுக்காடு செயல்படுவதாகவும் அதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய டெல்லி ஜால் வாரிய அதிகாரி ஒருவர், “ஏறத்தாழ 2.5 பிபிஎம் (ppm) அளவு அமோனியா பதிவாகியிருந்தது. அது, சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்வதைப் பொறுத்தவரை அளவுக்கதிகமானது. அதனால் விநியோகிக்கப்படும் நீரின் அளவைக் குறைக்கவேண்டியிருந்தது. சில மணிநேரத்தில் வாஸிராபாத் ஆலை இயல்புநிலைக்குத் திரும்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று விவரித்தார்.

குறிப்புச் சொற்கள்