துடிப்பான ஊடகப் பொழுதுபோக்குத் தளமாக இந்தியாவை நிலைநிறுத்த இலக்கு

2 mins read
426925af-6325-47cd-a524-4296e942b8ec
முதலாவது ‘வேவ்ஸ் 2025’ உச்சநிலை மாநாட்டைத் தொடங்கிவைத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி. - படம்: இந்தியத் தூதரகம்

விஷ்ருதா நந்தகுமார்

துடிப்பான ஊடகப் பொழுதுபோக்குத் துறையில் இந்தியாவை ஓர் ஒப்பற்ற, உலகளாவிய சக்தியாக நிலைநிறுத்த வேண்டும் எனும் நோக்கத்துடன் ‘வேவ்ஸ் 2025’ உச்சநிலை மாநாடு தொடங்கி வைக்கப்பட்டது. உலக மேடையில் படைப்பாற்றல், புத்தாக்கம், செல்வாக்கு ஆகிய கூறுகளுக்கான புதிய தரத்தை அமைப்பதே அதன் நோக்கமாகும். மும்பையின் ஜியோ உலக மையத்தில் நடந்த முதல் வேவ்ஸ் 2025 உச்சநிலை மாநாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மே 1ஆம் தேதி தொடங்கிவைத்தார்.

நான்கு நாள்கள் நடைபெற்ற இந்த உச்சநிலை மாநாட்டில் ஏறத்தாழ 90 நாடுகளிலிருந்து 10,000 பேராளர்கள், 1,000 படைப்பாளிகள், 300க்கும் மேலான நிறுவனங்கள் என ஏராளமானோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், மாநாட்டின் இரண்டாவது நாளில் முதல் அனைத்துலக ஊடக உரையாடலுக்குத் தலைமை தாங்கினார். 25 நாடுகளைச் சார்ந்த அமைச்சர்களும் அதில் கலந்துகொண்டனர். பொழுதுபோக்கு மற்றும் தகவல் ஒலி/ஒளிபரப்பு; மின்னிலக்க ஊடகம் மற்றும் புத்தாக்கம்; உயிரோவியம், மெழுகுக் காட்சிகள்; விளையாட்டுகள், கேலிச்சித்திரம்; திரைப்படங்கள் ஆகிய ஐந்து முக்கியக் கூறுகளை மையப்படுத்தியே மாநாட்டில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்த உச்சநிலை மாநாட்டை ஒரு தளமாகப் பயன்படுத்தி, உலக மக்களைச் சென்றடையும் உள்ளடக்க உருவாக்கத்திற்கான வாய்ப்புகளையும் உலகளாவிய ஊடகப் பொழுதுபோக்குத் தலைவர்களுக்கு முதலீட்டு வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, உள்ளடக்க உருவாக்கத்திற்கான ஒரே இடமாக இந்தியாவை இம்மாநாடு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், தீபிகா படுகோன், ஏ ஆர் ரகுமான் போன்றோர் மாநாட்டு ஆலோசனை மன்றத்தில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்