கொச்சி: இந்தியாவின் கேரள மாநிலம், வயநாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 330ஆக உயர்ந்துள்ளது.
அப்பேரிடரில், அண்மையில் பிறந்த குழந்தைகள் பலவும் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், இடுக்கியைச் சேர்ந்த பாவனா சஜின் என்ற பெண், அத்தகைய குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தந்து அரவணைக்க முன்வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனாலும், ‘இங்கே வாருங்கள், அங்கே வாருங்கள்’ எனச் சொல்லி, அவர் அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துயர்துடைப்பு முகாம்களில் உள்ள பச்சிளங்குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தேவை எனக் கூறி, தமக்கு இரு தொலைபேசி அழைப்புகள் வந்தன என்று பாவனா சொன்னதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி தெரிவித்தது.
அதனையடுத்து, தம் கணவர் சஜினுடனும் குழந்தைகளுடனும் சேர்ந்து வேன் மூலம் சாலை வழியாக 350 கிலோமீட்டர் பயணம் செய்து, வயநாடு சென்றார் பாவனா. ஆனால், அங்கு சென்றபின் தம்மை அழைத்தவர்களை அவர் அழைத்தபோது, அவ்வெண்கள் ‘பயன்பாட்டில் இல்லை’ எனத் தெரியவந்தது.
“அவசரம் எனக் கூறி எங்களை அழைத்தனர். நள்ளிரவு நேரமாக இருந்தபோதும் நாங்கள் புறப்பட்டோம். அதிகாலை 5 மணிக்கு அங்கமாலியை வந்தடைந்தபின் ஒரு மணி நேரமே நாங்கள் உறங்க முடிந்தது. கல்பேட்டைக்கு வந்ததும் எங்களைத் தொடர்புகொள்ளச் சொல்லி அவர்கள் கூறினர். ஆனால், அதன்பிறகு அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை,” என்று சஜின் விவரித்தார்.
இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்த பாவனா - சஜின் இணையர், அதன்பின் மேப்பாடி அரசுப் பள்ளி துயர்துடைப்பு முகாமிற்கும் அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கும் சென்று, ஏதேனும் குழந்தைக்குத் தாய்ப்பால் தேவைப்படுகிறதா என விசாரித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது அவர்கள் சுல்தான் பத்தேரியிலுள்ள தங்கள் உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.