வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
வீடுகள், பாலங்கள், சாலைகள் என பல கட்டுமானங்கள் மண்ணுக்குள் புதைந்தன. பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய இந்த நிலச்சரிவு, கேரளாவின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று 15வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது. சாலியாற்றின் அருகே உள்ள சூச்சிப்பாறை, காந்தன்பாறை, போத்துகல் உள்பட 5 பகுதிகளில் சடலங்கள் உள்ளதா என தேடுதல் பணி திங்கட்கிழமை நடந்தது.
நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேசிய பேரிடர் மீட்பு படை, காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர், தன்னார்வலர்கள் என கிட்டத்தட்ட 200 பேர் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே திங்கட்கிழமையன்று கெட்டுப்பாறை மற்றும் இருட்டுக்குத்தியில் இருந்து இரு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சூச்சிப்பாறை நீர்வீழ்ச்சி அருகில் மனித உடல் பாகங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர்.
மோசமான வானிலை காரணமாக சாலியாற்றில் தேடுதல் பணி கடினமாக உள்ளது என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. சாலியாற்றில் இருந்து இதுவரை 245 உடல்கள் மற்றும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் 130க்கும் மேற்பட்டோரை காணவில்லை. தேடுதல் பணிகள் தொடர்கிறது.