வயநாடு: ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை (நவம்பர் 13) வாக்குப்பதிவு விகிதம் 64.72 விழுக்காடாகப் பதிவானது.
2009ல் வயநாடு தொகுதி அமைக்கப்பட்டது முதல், அங்கு பதிவாகியுள்ள ஆகக் குறைவான வாக்குப்பதிவு விகிதம் இதுவே.
இவ்வாண்டு வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் வென்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதும் இரு தொகுதிகளில் வயநாடு தொகுதியைக் கைவிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இவ்வாண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் 72.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்தன. ராகுல் காந்தி அத்தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்ட 2019 தேர்தலில் இந்த விகிதம் 80.33 விழுக்காடாக இருந்தது.
இம்முறை, ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் இருவரும் பிரியங்கா காந்திக்கு எதிராகக் களமிறங்கியுள்ளனர்.

