நெல்லை: எது நல்லாட்சி என்பதை திருவள்ளுவர், திருக்குறள் மூலம் விளக்கியுள்ளார் என்றும் பிரதமர் மோடி அதை உணர்ந்து குறள் வழி செயல்படுகிறார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் எனச் சபதம் மேற்கொண்டு பாஜக செயல்படும் என்றார்.
“ஒரு நல்ல மன்னன் என்பவன், அருமையான குடிமக்கள், வலிமையான சேனை, நல்ல விளைநிலம் ஆகியவற்றைக் கொண்டு செயல்பட வேண்டும் எனத் திருக்குறள் கூறுகிறது. பிரதமர் மோடி இதை உணர்ந்துள்ளார்.
“நாடாளுமன்றத்தில் புதிதாக ஒரு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. முதல்வரோ, பிரதமரோ, யாராக இருந்தாலும் 30 நாள்கள் சிறைக்குச் செல்ல நேர்ந்தால், அவர்கள் பதவியில் தொடரக்கூடாது என்பதுதான் அந்தச் சட்டம்.
“திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பல மாதங்கள் சிறையில் அமைச்சராக இருந்தார். இனி அப்படி நடக்காது. அதனால்தான், இந்தச் சட்டத்தை ஸ்டாலின் கருப்புச் சட்டம் என்கிறார். இருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் திமுகவுக்கு இந்தச் சட்டம் குறித்து பேசத் தகுதி இல்லை,” என்றார் அமித்ஷா.

