மக்களவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முடிவு

மக்களவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முடிவு

படம்: இந்தியா டுடே

10 Feb 2026 - 7:01 pm

2 mins read

புதுடெல்லி: நாடாளுமன்ற‌ மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி மக்களவைச் செயலாளரிடம் இண்டியா கூட்டணி சார்பாக, 118 எம்பிக்கள் கையெழுத்திட்ட கடிதம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) வழங்கப்பட்டது.

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்க, எதிர்க்கட்சிப் பெண் உறுப்பினர்கள் திட்டமிட்டிருப்பதாக ஓம்பிர்லா குற்றம் சாட்டியிருந்தார்.

இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மக்களவையில் எதிர்பாராத செயல்கள் நிகழக்கூடும் என முன்கூட்டியே தமக்குத் தகவல் கிடைத்ததாகவும், எனவே பிரதமரிடம் மக்களவைக்கு வரவேண்டாம் என தாம் கேட்டுக் கொண்டதாகவும் சபாநாயகர் ஓம்பிர்லா கூறியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து மிகுந்த வேதனையுடனும் அரசியலமைப்பு சட்டப் பொறுப்பாளர் என்ற வலுவான உணர்வுடனும் சபாநாயகருக்குக் கடிதம் எழுதுவதாக காங்கிரஸ் பெண் எம்பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பிரியங்கா காந்தி ஜோதிமணி, சுதா உள்ளிட்ட பெண் எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அண்மையில் நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரின்போது அதிபரின் உரைக்குப் பிரதமர் மோடி பதில் அளிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது‌. ஆனால், பிரதமர் மோடி மக்களவைக்கு வரவில்லை‌.

இந்நிலையில், காங்கிரஸ் பெண் எம்பிக்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு மக்களவையில் உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியின் விருப்பப்படி இண்டியா கூட்டணியின் எட்டு எம்பிக்கள் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்கவில்லை என்பது தெரிகிறது என்றும் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் சாடியுள்ளனர்.

மக்கள் விரோத அரசுக்கு எதிராகப் போராடியதற்காகவும் அதற்குப் பிரதமரை பொறுப்பேற்குமாறு வலியுறுத்தியதாலும் காங்கிரஸ் பெண் உறுப்பினர்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“வன்முறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை அச்சுறுத்தல் மூலம் எங்கள் குரலை அமைதிப்படுத்த முடியாது. எங்கள் போராட்டம் அமைதி வழியிலானது,” என்று பெண் எம்பிக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா, பிரதமர் மோடி மக்களவைக்கு வராததற்கு அச்சுறுத்தல் காரணமல்ல, பயம்தான் காரணம் என்றார்.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்பெண்