இந்தியாவுடனான வர்த்தக உடன்பாட்டை நெருங்கிவிட்டோம்: அதிபர் டிரம்ப்

இந்தியாவுடனான வர்த்தக உடன்பாட்டை நெருங்கிவிட்டோம்: அதிபர் டிரம்ப்

2 mins read
a1010836-d3ce-4a2b-8ebf-9d95085f3feb
பிரான்சின் கிழக்கு நகரான ஈவியனில், ஜி7 உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (இடம்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் சந்தித்துப் பேசினர். - படம்: ஏஎஃப்பி

ஈவியன்: நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் இந்திய-அமெரிக்க வர்த்தக உடன்பாட்டை எட்டுவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிவந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சநிலை மாநாட்டில் திரு டிரம்ப்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் சந்தித்துப் பேசினர்.

அப்போது, உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குத் திரு டிரம்ப் பதிலளித்தார்.

“அண்மைக்காலமாகப் பேச்சு நடத்திக்கொண்டிருக்கிறோம். பேச்சுவார்த்தையில் மோடி மிகவும் கடுமையானவர். நீண்டகாலமாக அவர் என் நண்பராக இருக்கிறார்,” என்றார் அவர்.

மேலும் திரு டிரம்ப் வேடிக்கையாகக் குறிப்பிடும்போது, மோடி ஒரு தேவதையைப்போலக் காட்சியளித்தாலும் கொலையாளியைப்போலக் கடுமையானவர் என்றார்.

இந்தியாவுக்குச் செல்ல இருப்பதாகக் கூறிய திரு டிரம்ப், எப்போது என்று குறிப்பிடவில்லை.

டிரம்ப் விதித்த வரிகள், பாகிஸ்தானுடனான மோதல், அண்மை ஈரான் போர் ஆகியவற்றால் நீடித்த ஓராண்டுப் பதற்றத்துக்குப் பிறகு தலைவர்கள் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

சீர்குலைந்திருந்த அமெரிக்க-இந்திய உறவைச் சரிசெய்யும் முயற்சியாக அந்தச் சந்திப்பு பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரு மோடி வெள்ளை மாளிகைக்குச் சென்றுவந்த பின்னர் அவரும் திரு டிரம்ப்பும் நேரில் சந்திக்கவில்லை.

அண்மையில் ஓமான் வளைகுடாப் பகுதியில் இந்தியக் கடலோடிகள் இருந்த கப்பல்கள்மீது அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் கடலோடிகள் மூவர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து வாஷிங்டனுக்கும் புதுடெல்லிக்கும் இடையில் பதற்றம் எழுந்து நீடித்த வேளையில் டிரம்ப்-மோடி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள முற்றுகையின் ஒரு பகுதியாக அந்தக் கப்பல்கள் குறிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

பொதுவெளியில் தலைவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புகழ்ந்து பேசினாலும் கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிகழ்ந்த சிறிய அளவிலான ராணுவ மோதலுக்குப் பிறகு அமெரிக்க-இந்திய உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்தியா-பாகிஸ்தான் போரை தாம் தலையிட்டு நிறுத்தியதாகத் திரு டிரம்ப் உரிமை கோரியபோது அதனை இந்தியா கடுமையாக மறுத்தது.

அதன் பிறகு பாகிஸ்தான் தலைவர்களுடன் திரு டிரம்ப் தனிப்பட்ட உறவுகளை வளர்த்துக்கொண்டார். அதன் பயனாக, ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவராகச் செயல்படும் அளவுக்குப் பாகிஸ்தானின் செல்வாக்கு அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்