இம்பால்: இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் என். பிரேன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆட்சிக்குத் தாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஜனதா தளக் கட்சி தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் பாஜக கூட்டணியிலிருந்து ஜனதா தளம் விலகிக்கொண்டதாக முன்னதாக செய்தி வெளியானது. அது எவ்வித அடிப்படையும் இல்லாத செய்தி என்று அக்கட்சி தெரிவித்தது.
இந்த விவகாரத்தின் தொடர்பில் மணிப்பூருக்கான தங்கள் கட்சித் தலைவர் ஷெத்ரிமயும் பிரேன் சிங்கைப் பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் ஜனதா தளம் குறிப்பிட்டது. அக்கட்சி, பாஜக கூட்டணியிலிருந்து விலகப்போவதாகக் கூறப்பட்டதை உறுதிப்படுத்தும் கடிதத்தை எழுதியதற்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒழுங்காக நடந்துகொள்ளாததே ஷெத்ரிமயும் பிரேன் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணம் என்று ஜனதா தளம் கூறியது. மாநில, மத்திய அரசாங்கங்களில் தாங்கள் தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டது.
ஷெத்ரிமயும் பிரேன் சிங் எழுதிய கடிதம் தவறான செய்தியைக் கொண்டது என்று ஜனதா தள தேசிய பேச்சாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் சொன்னார். அக்கட்சியின் மணிப்பூர் மாநிலப் பிரிவு, மத்திய அரசாங்கத்தில் செயல்படும் கட்சியினரைத் தொடர்புகொள்ளாமல் சொந்தமாகச் செயல்பட்டுவிட்டது என்று அவர் தெரிவித்தார்.
ஜனதா தளம், பாஜகவுக்கு அளிக்கும் ஆதரவை மீட்டுக்கொள்வதை உறுதிப்படுத்துவதாக ஷெத்ரிமயும் பிரேன் சிங், மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவுக்குக் கடிதம் அனுப்பினார். அம்மாநிலத்தில் ஒரே ஜனதா தள சட்டமன்ற உறுப்பினரான அப்துல் நாசர், எதிர்க்கட்சிகளுக்கான சட்டசபை இருக்கைகளில் அமர்வார் என்றும் அவர் கூறியிருந்தார்.

