தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுடன் இணக்கமான இருதரப்பு உறவை விரும்புகிறோம்: பங்ளாதேஷ்

2 mins read
2e03995f-2c23-4c87-b320-8e6ae7b5d4ea
பங்ளாதேஷ் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், பிரதமர் மோடி. - கோப்புப்படம்: ஊடகம்

டாக்கா: இந்தியாவுடன் இணக்கமான இருதரப்பு உறவை விரும்புவதாக பங்ளாதேஷ் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பரஸ்பர உறவு, மரியாதை, புரிதல் ஆகியவை மக்களின் நலனுக்காகப் பாடுபடும் இரு நாடுகளையும் வழிநடத்தும் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்ளாதேஷ் பிரதமராகப் பொறுப்பு வகித்த ஷேக் ஹசீனா, அதிலிருந்து விலகிய பிறகு, அவரது தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு அங்கு திடீர் தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இந்தியாவின் இச்செயலுக்கு பங்ளாதேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிடுவதாகப் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

இத்தகைய சூழலில், பங்ளாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி இந்தியப் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பங்ளாதேஷ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார் முகமது யூனுஸ்.

அதில், பங்ளாதேஷ் எப்போதும் இந்தியாவுடன் பரஸ்பர உறவையே விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தியாகத் திருநாளானது தியாகம், தாராள மனப்பான்மை, ஒற்றுமை ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றாகப் பணியாற்ற உத்வேகம் அளிக்கிறது,” என்று முகமது யூனுஸ் கூறியுள்ளார்.

முன்னதாக, ஜூன் 4ஆம் தேதி முகமது யூனுசுக்கு எழுதிய கடிதத்தில், பக்ரீத் பண்டிகையானது இந்தியாவின் வளமான, பன்முகத்தன்மை கொண்ட கலாசாரப் பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று குறிப்பிட்டிருந்தார் பிரதமர் மோடி.

“அமைதியான உலகத்தை உருவாக்குவதற்கு அவசியமான தியாகம், இரக்கம், சகோதரத்துவம் ஆகிய காலத்தால் அழியாத மதிப்புகளை இது நமக்கு நினைவூட்டுகிறது,” என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்