ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம்: இந்தியத் தூதர் திட்டவட்டம்

2 mins read
f5e227c3-d7ad-4395-b0cc-a2780027f66b
ரஷ்யாவிற்கான இந்தியத் தூதர் வினய் குமார். - படம்: ரஷ்யாவிற்கான இந்தியத் தூதரகம்

மாஸ்கோ: எங்கு விலை குறைவாகக் கிடைக்கிறதோ அங்கிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடரும் என்று ரஷ்யாவிற்கான இந்தியத் தூதர் வினய் குமார் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்தின் ‘டாஸ்’ செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த திரு வினய், சந்தைப் போக்கிற்கு ஏற்பவும் 1.4 பில்லியன் மக்களின் தேவைகளை நிறைவுசெய்யும் வகையிலும் இந்தியாவின் எரிசக்திக் கொள்கை இருக்கிறது என்று வலியுறுத்தியுள்ளார்.

“எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ, அங்கு எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுவனங்கள் தொடரும். தற்போதைய நிலைமை இதுதான்,” என்று அவர் கூறினார்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன்மூலம் உக்ரேன் மீதான அதன் ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்தியா நிதி ஆதரவளித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிவரும் நிலையில், திரு வினய் இவ்வாறு கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில், அமெரிக்காவின் குற்றச்சாட்டை இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது.

ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடனான இந்தியாவின் எரிசக்தி ஒத்துழைப்பு உலகில் எண்ணெய்ச் சந்தையின் நிலைத்தன்மைக்கு உதவுவதாக திரு வினய் குறிப்பிட்டார்.

“1.4 பில்லியன் மக்களுக்கான எரிசக்திப் பாதுகாப்பை உறுதிசெய்வதே எங்கள் நோக்கம் என்பதைத் தெளிவாகக் கூறிவருகிறோம். மற்ற நாடுகளுடன் செய்துகொண்டுள்ளதைப் போல, ரஷ்யாவுடனான எங்களது ஒத்துழைப்பும் அதனை உறுதிப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது,” என்று அவர் விளக்கினார்.

தொடக்கத்தில் இந்திய இறக்குமதிகளுக்கு 25 விழுக்காடு வரிவிதிப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25 விழுக்காடு, அதாவது மொத்தம் 50 விழுக்காடு வரி விதிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் முடிவு ‘நியாயமற்றது’ எனக் குறிப்பிட்ட திரு வினய், தேசிய நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்தியா தொடரும் என்றும் சொன்னார்.

இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வணிகமானது இருதரப்பு நலன்கள், சந்தைக் காரணிகளின் அடிப்படையில் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் வணிகம் செய்துவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்புச் சொற்கள்