புதுடெல்லி: இந்தியாவுடன் இணைந்து வளர்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பு நியூசிலாந்துக்கு வாய்த்துள்ளதாக அந்நாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது நியூசிலாந்துக்கு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு மாபெரும் வாய்ப்பு என்று வர்ணித்துள்ளார்.
ஏப்ரல் 27ஆம் தேதி இரு தரப்புக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.88 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீடுகள் கிடைக்கும் என்றும் இருதரப்பு வர்த்தகம் இருமடங்காக உயரும் என்றும் பொருளியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது மிகச் சிறந்த செய்தி என்று தமது காணொளியில் நியூசிலாந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் வசிக்கும் 150 கோடி மக்கள் படிப்படியாக செல்வந்தர்களாக மாறி வருவதாகவும், இதன் காரணமாக நியூசிலாந்து போன்ற இடங்களில் இருந்து வரும் உயர்தரமான பொருள்கள், சேவையை அம்மக்கள் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளியலாக உருவெடுக்க உள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்தியாவுக்குத் தேவையான 95 விழுக்காடு பொருள்களை நியூசிலாந்தால் ஏற்றுமதி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள அவர், புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முதல் நாளில் இருந்தே 57 விழுக்காடு பொருள்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
“குறைந்த வருமானம் கொண்ட நிலையில் இருந்து நடுத்தர வருமானம் கொண்ட நிலைக்கு இந்தியா உயருவதால், நியூசிலாந்தின் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும். இப்படிப்பட்டச் சூழலில், இந்தியாவுடன் இணைந்து வளர்வதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு நியூசிலாந்துக்கு உள்ளது,” என்றார் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது நியூசிலாந்து ஏற்றுமதியாளர்களை உலக அரங்கில் போட்டித்தன்மை மிக்கவர்களாக மாற்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

