புதுடெல்லி: இலங்கைக்குச் சொந்தமான பகுதிகளை, இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது என்று இலங்கையின் புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்க கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு திசாநாயக்க அவ்வாறு சொன்னார் என்று இந்திய அரசாங்கம் அறிக்கை ஒன்றின்வழி தெரிவித்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 4) இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது நடந்த சந்திப்புகளில் இருநாடுகளும் பல்வேறு அம்சங்களில் ஒத்துப்போனதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திரு ஜெய்சங்கர், திரு திசாநாயக்க இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல் பிறநாட்டு வெளியுறவு அமைச்சராவார்.
“கொழும்பில் அதிபர் அனுர திசாநாயக்கவைச் சந்தித்ததை நான் மிகுந்த கெளவரமாகக் கருதுகிறேன். (இந்திய) அதிபர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மனமார வாழ்த்து தெரிவித்ததாக அவரிடம் சொன்னேன்,” என்று வெள்ளிக்கிழமை கூறிய திரு ஜெய்சங்கர், “இலங்கைக்குச் சொந்தமான பகுதிகளை எந்த வகையிலும் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது என்று (இலங்கை) அதிபர் வலியுறுத்தினார்,” என்றும் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளியல் மீண்டு வருவதற்கு இந்தியாவின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்றும் திரு ஜெய்சங்கர் மறுவுறுதிப்படுத்தினார்.
திரு திசாநாயக்க, “இருதரப்பும் பலனடையக்கூடிய அம்சங்களில் இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்வதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் பேசப்பட்டது,” என்று திரு ஜெய்சங்கரைச் சந்தித்த பிறகு தெரிவித்தார்.
இந்தியாவிலிருந்து முதலீடு வருவதற்கு வகைசெய்வது, இலங்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, அங்குச் செல்லும் இந்தியச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவற்றைப் பற்றியும் திரு ஜெய்சங்கர் பேசினார்.