புதுடெல்லி: எந்தவொரு வெளிநாட்டின் அழுத்தத்துக்கும் பணிந்து செயல்படப் போவதில்லை என்றும் தங்கள் நாட்டின் நலனே முதன்மையானது என்றும் இந்தியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன் விதித்துள்ள புதிய பொருளியல் தடைகள், கூடுதல் வரிகள் குறித்த அச்சுறுத்தல்களுக்கு இடையே, இந்தியா தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யா, ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நூறு விழுக்காடு வரை கூடுதல் சுங்க வரி விதிப்பதற்கான புதிய சட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இந்தப் புதிய வரிவிதிப்பானது, ரஷ்யாவின் எரிசக்தித் துறைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நேரடியாகப் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், குடிமக்களின் நலனே இந்திய அரசாங்கத்துக்கு முக்கியம் என்றார்.
நாட்டின் நிலைத்தன்மைக்கும் மக்களின் நன்மைக்கும் தேவையான அனைத்து முடிவுகளும் சுதந்திரமாக எடுக்கப்படும் என்றும் எந்தவொரு நாட்டின் உத்தரவுகளுக்கும் கட்டுப்பட்டு இந்தியா இயங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
நியாயமற்ற வரிகளுக்கு இந்தியா அஞ்சப்போவதில்லை என்றும் திரு கீர்த்தி வர்தன் தெளிவுபடுத்தினார்.
இதனிடையே, இந்தியாவின் எரிசக்தித் தேவைகளை நிறைவேற்ற வணிக ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் சாதகமாக உள்ள எந்தவொரு இடத்திலிருந்தும் கச்சா எண்ணெய் தொடர்ந்து கொள்முதல் செய்யப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்திய எதிர்க்கட்சிகளும் விமர்சித்துள்ளன.
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஒரே வழி, அதை உறுதியுடன் எதிர்த்து நிற்பதே என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.
