ஆந்திராவை நாட்டின் முன்மாதிரி மாநிலமாக மாற்ற பாடுபடுவோம்: அமைச்சர் நார லோகேஷ்

ஆந்திராவை நாட்டின் முன்மாதிரி மாநிலமாக மாற்ற பாடுபடுவோம்: அமைச்சர் நார லோகேஷ்

படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

04 Oct 2026 - 3:46 pm

2 mins read

விஜயவாடா: ஆந்திரப் பிரதேச மாநிலத்தை வேகம், புத்தாக்கம், வளர்ச்சியில் நாட்டின் சிறந்த முன்மாதிரி மாநிலமாக மாற்ற மாநில அரசு முழுமூச்சாகப் பாடுபட்டு வருவதாக மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நார லோகேஷ் தெரிவித்துள்ளார்.

விஜயவாடாவில் சனிக்கிழமை நடைபெற்ற ‘பான்-ஐஐடி ஆந்திரப் பிரதேச உச்சநிலை மாநாடு 2026’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

“மாநில அரசு தற்காலிக ஏற்பாடுகளைத் தாண்டி, வேகமான செயல்பாடுகளை முறைப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.

“புதிய யோசனைகளையும் தொடக்க முயற்சிகளையும் சோதித்துப் பார்ப்பதற்கு ஆந்திரப் பிரதேசம் ஒரு சிறந்த சோதனைக் களமாகத் திகழ்கிறது.

“மாநிலத்தில் வெற்றிகரமாக அமல்படுத்தப்படும் திட்டங்களை நாட்டின் பிற மாநிலங்களும் பின்பற்றி அமல்படுத்த முடியும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“மாநிலங்களுக்கு இடையே அதிகரித்து வரும் போட்டி மனப்பான்மை நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது. ஆந்திரப் பிரதேசம் ஒரு சிறந்த மையமாக உருவெடுக்க இலக்கு கொள்ள வேண்டும்.

“இங்குச் சாதிக்கப்படும் புத்தாக்கங்களும் வேகமும் பிற மாநிலங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமையும்,” என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டத்திற்கு ஏற்ப மாநிலங்கள் போட்டியிட்டுப் புத்தாக்கங்களைப் புகுத்தி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும்.

“23 ஐஐடி நிறுவனங்களையும் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் முன்னாள் மாணவர்களையும் உள்ளடக்கிய பான்-ஐஐடி கூட்டமைப்பு, தொழில், ஆராய்ச்சித் துறையை மேலும் வலுப்படுத்துகிறது,” என்றார் திரு நார லோகேஷ்.

இந்த மாநாட்டை நடத்துவதற்கு அமராவதியையும் ஆந்திரப் பிரதேசத்தையும் தேர்ந்தெடுத்ததற்காகப் பான்-ஐஐடி அமைப்பிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடுவின் அனுபவமிக்கத் தலைமையைப் பாராட்டிய அமைச்சர், “தற்போதைய அரசில் 50 விழுக்காடு சட்டமன்ற உறுப்பினர்களும் 17 அமைச்சர்களும் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளையர்கள் ஆவர்,” என்று குறிப்பிட்டார்.

இளம் தலைவர்களின் துடிப்புமிக்கச் செயல்பாடுகளுடன் முதலமைச்சரின் வழிகாட்டுதலும் இணைந்து மாநிலத்தை விரைவான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதாக திரு நார லோகேஷ் பெருமிதம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
ஆந்திராஅமைச்சர்மாநில அரசுநரேந்திர மோடி