புதுடெல்லி: இந்தியாவின் பொருளியல் ஆதாரங்களின் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயங்காது என அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர், அமெரிக்காவுக்குச் சென்றுள்ள அவர், அங்கிருந்தபடி, இந்தியாவுக்கு மிரட்டல் விடும் வகையில் பேசியிருப்பது அனைத்துலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபுளோரிடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அசிம் முனீர், ரிலையன்ஸ் குழுமத்தின் சுத்திகரிப்பு ஆலை பாகிஸ்தானின் எதிர்கால இலக்காக மாற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டார்.
குஜராத்தின் ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இது இந்தியாவின் முக்கியமான பொருளியல் ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பஹல்காம் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்திவிட்டது. மேலும், அந்த நதியின் மீது புதிய அணை கட்டப்படும் என்று அறிவித்தது. இவ்வாறு நடந்தால் பாகிஸ்தானுக்குப் பெரும் சிக்கல் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவால் சிந்து நதி நீர்வரத்து பாதிக்கப்பட்டால் பாகிஸ்தான் வேடிக்கை பார்க்காது என்று அசிம் முனீர் எச்சரித்துள்ளார்.
“இந்தியா அணை கட்டும் வரை காத்திருப்போம். அதன் பிறகு இந்தியாவின் உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழிப்போம். பாகிஸ்தான் ஓர் அணுசக்தி நாடு.
“நாங்கள் வீழும் நிலை ஏற்படும் பட்சத்தில், பாதி உலகை வீழ்த்திய பிறகே நாங்களும் வீழ்வோம்,” என்று அவர் பேசியிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால், அணு ஆயுதங்களைப் பயன்படுத்த பாகிஸ்தான் தயங்காது என்றும் அவர் ஆவேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அசிம் முனீர் இவ்வாறு பேசியதற்கு ஒலி, ஒளி ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாரும் கைப்பேசி, மின்னிலக்க கருவிகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிகிறது.
இந்நிலையில், அணு ஆயுதத் தாக்குதல் குறித்து அச்சுறுத்துவது பாகிஸ்தானின் வழக்கமாகிவிட்டது என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
“அமெரிக்காவுக்குச் சென்ற அசிம் முனீர் பேசிய சில கருத்துகள் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. பயங்கரவாதிகளுடன் நட்புறவில் உள்ள ராணுவத்தைக் கொண்டுள்ள நாட்டிடம் அணு ஆயுதங்களின் பாதுகாப்பையும் கட்டுப்பாட்டையும் நம்ப முடியாது என்ற சந்தேகத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது. இக்கருத்துகள் நட்பு நாட்டின் மண்ணிலிருந்து பேசப்பட்டுள்ளது என்பது வருத்தமளிக்கிறது. இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு பணியாது என ஏற்கெனவே கூறியுள்ளோம்,” என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.