ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணத்திற்குச் சென்றவர்கள் பயணம் செய்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதில் ஐவர் உயிரிழந்தனர். 25க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். பேருந்தில் 70க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு திருமணத்தில் பங்கேற்றவர்களை சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்திலிருந்து ஏற்றிக்கொண்டு பேருந்து ஜார்க்கண்டின் லாத்தேஹார் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஓர்சா பங்ளாதாரா பள்ளத்தாக்குப் பகுதியில் பேருந்து வந்தபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்குத் தகுந்த சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

