புதுடெல்லி: இந்தியத் திருமணங்கள் என்றாலே உறவினர்களின் வருகை, விதவிதமான உணவுகள், ஆடல் பாடல்களுடன் களைகட்டும்.
அத்தகைய ஒரு பிரம்மாண்டமான கொண்டாட்டத்திற்காக, இந்தியக் குடும்பம் ஒன்று ரயில் பெட்டியை முழுமையாக முன்பதிவு செய்து பயணம் செய்யும் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
ஆனால், இக்காணொளி எடுக்கப்பட்ட சரியான தேதி, இடம் குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாகத் தெரியவில்லை.
ரயிலில் அரங்கேறிய கொண்டாட்டம்
சமூக ஊடகங்களில் பரவிவரும் அந்தக் காணொளியில், ரயில் பெட்டியின் நுழைவாயில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்கிறார்.
ரயிலுக்குள் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் உற்சாகமான இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்கின்றனர்.
மணப்பெண் கேக் வெட்டும்போது குடும்பத்தினர் அனைவரும் ஆரவாரம் செய்து அவருக்குப் பரிசுகளை வழங்குகின்றனர்.
இந்தக் கொண்டாட்டத்திற்கு மத்தியிலும், ஒரு பயணச்சீட்டுப் பரிசோதகர் கூட்ட நெரிசலில் புகுந்து தனது பணியைச் செவ்வனே செய்கிறார். பின்னர், அவரும் அந்தக் குடும்பத்தினரின் மகிழ்ச்சியில் புன்னகையுடன் இணைந்து கொள்கிறார்.
இந்தக் காணொளியைப் பார்த்த பலரும் “முழுக் குடும்பமும் ரயிலில் ஒன்றாகச் சேர்ந்து ஒரு திருமணத்திற்காக இணைந்திருப்பது ஒரு தனி சுகம்தான்,” என்றும், “இந்தியக் கலாசாரத்தின் பெருமையையும் கூட்டுக்குடும்பத்தின் ஒற்றுமையையும் கொண்டாட்டம் படம்பிடித்துக் காட்டியுள்ளது,” என்றும் பலரும் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

