அமிர்தசரஸ்: திருமண வரவேற்பின்போது மணமகள் மீது ரூ.8.5 கோடி ரூபாய் நோட்டுகளைத் தூவும் காணொளி ஒன்று இணையத்தில் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் திருமணத்துக்குப் பின், மணமகன் குடும்பத்தினர் மணமகளைப் புகுந்த வீட்டுக்கு அழைக்கும்போது பூக்கள் தூவி வரவேற்பது வழக்கம். அண்மையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் பூக்களுக்குப் பதிலாக ரொக்கப் பணம் தூவப்பட்டது.
மணமகனின் குடும்பத்தினர் வரிசையாக வந்து மணமகள் மீது ரொக்கப் பணத்தைத் தூவுவது, அபிஷேகம் செய்வதுபோல் ரூபாய் நோட்டுகளைக் கொட்டுவது உள்ளிட்ட காட்சிகள் அக்காணொளியில் இடம்பெற்றுள்ளன. சமூக ஊடகங்களில் பலரும் அச்செயலுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
அத்திருமணத்தின் இசை நிகழ்வில் பங்கேற்ற டிஜே நிசான் சிங் வெளியிட்டுள்ள மற்றொரு காணொளியில், ரூ.8.5 கோடி ரொக்கப் பணம் பயன்படுத்தப்படவில்லை என்றும் ரூ.4 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். அவை அனைத்துமே பத்து ரூபாய் நோட்டுகள் என்றும் அவை பின்னர் சேகரிக்கப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

