மேற்காசிய மோதல் இந்தியாவை நெருங்கிவிட்டது: ராகுல் விமர்சனம்

மேற்காசிய மோதல் இந்தியாவை நெருங்கிவிட்டது: ராகுல் விமர்சனம்

2 mins read
11313611-424f-419c-a252-6b8df4a6fcda
ராகுல் காந்தி. - படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானிய போர்க்கப்பல் ஐரிஸ் தேனா தாக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குப் பின்னர், இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்காசிய மோதல் இந்திய துணைக்கண்டத்தை நெருங்கி வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடியோ இன்னும் அமைதி காப்பதாகவும் திரு ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அண்மையில் விசாகப்பட்டினத்தில் இந்தியக் கடற்படை சார்பாக ‘மிலன்’ என்ற பெயரில் போர்ப் பயிற்சி நடைபெற்றது. இதில் ஈரானுக்குச் சொந்தமான ஐரிஸ் தேனா என்ற போர்க்கப்பல் பங்கேற்றது.

பயிற்சி முடிந்து நாடு திரும்பிய அந்தக் கப்பல் இலங்கை கடற்பகுதியைக் கடக்க முயன்றபோது, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட நீரில் நீந்திச் செல்லும் ஏவுகணை தாக்கி அழித்தது. அதிலிருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் தன்னாட்சி அதிகாரத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அடகு வைத்துவிட்டார் என ராகுல் காந்தி தாக்கியுள்ளார்.

இதுபோன்ற இக்கட்டான தருணங்களில் இந்தியாவுக்கு வலுவான தலைமைதான் தேவை என்றும் தற்போதைய சூழலில் சமரசம் செய்துகொண்ட ஒரு பிரதமர்தான் வாய்த்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் தற்போது நிலையற்ற கட்டத்துக்குள் நுழைந்துவிட்டது என்றும் இந்திய எண்ணெய் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது என்றும் ராகுல் கவலை தெரிவித்துள்ளார்.

மேற்காசியாவில் நடந்துவரும் போர், இந்தியக் கொல்லைப்புறத்துக்கே வந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தியப் பெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்தது குறித்து பிரதமர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருவதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தி, ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியைக் கொன்றன.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு சிற்றரசு, பஹ்ரைன், குவைத், ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட பல வளைகுடா நாடுகளில் இஸ்ரேல், அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், போர் என்பது எந்தப் பிரச்சினைக்கும் நல்ல தீர்வல்ல என்றும் பேச்சுவார்த்தை, அரசு தந்திரம் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்