மேற்காசிய மோதல்: பிரிக்ஸ் அமைப்பில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இந்தியா முயற்சி

மேற்காசிய மோதல்: பிரிக்ஸ் அமைப்பில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இந்தியா முயற்சி

2 mins read
89a749b6-5dff-4055-9f48-d54f8a9ee63e
மேற்காசிய மோதல் தொடர்பாக அண்மையில் பிரிக்ஸ் அமைப்புக்குள் நடந்த விவாதங்கள் குறித்த சில விவரங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. - படம்: சி4எஸ் கோர்சஸ்

புதுடெல்லி: மேற்காசியப் போர் தொடர்பாக பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகள் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்க இந்தியா முயன்று வருகிறது.

எனினும், இம்மோதலில் மூன்று பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் ஈடுபாடு, வட்டார நிலைமை குறித்து உறுப்பு நாடுகளுக்குள் ஒருமித்த கருத்தை உருவாக்குவதை கடினமாக்கி உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் திரு. ரந்தீர் ஜெய்ஸ்வால், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியபோது தொடங்கிய நெருக்கடியில் ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அமீரக சிற்றரசுகள் உள்ளிட்ட சில பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு நேரடித் தொடர்புள்ளது என்றார்.

எனவே, உறுப்பு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தற்போது பிரிக்ஸ் அமைப்புக்கு தலைமையேற்றுள்ள இந்தியா, உறுப்பு நாடுகள் இடையேயான விவாதங்களை எளிதாக்கி வருகிறது,” என்றார் ரந்தீர் ஜெய்ஸ்வால்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான பழிவாங்கும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகச் சிற்றரசுகள் மீது ஈரான் குறிவைத்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, வட்டார, உலகளாவிய நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் ஆதரிப்பதில் பிரிக்ஸ் குழு ஆக்கபூர்வமான பங்கை வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈரான் பகிரங்கமாக முன்வைத்தது.

“கடைசியாக கடந்த மார்ச் 12 அன்று மெய்நிகர் காட்சி காணொளி மூலம் கூட்டம் நடைபெற்றது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும்,” என்றார் திரு ரந்தீர் ஜெய்ஸ்வால்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி உள்ளிட்ட பிற வட்டார நாடுகளின் தூதர்களுடன் தொலைபேசி அழைப்புகளைத் தொடர்ந்தாலும், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையை நடத்தவும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

இதனிடையே, மேற்காசிய மோதல் தொடர்பாக அண்மையில் பிரிக்ஸ் அமைப்புக்குள் நடந்த விவாதங்கள் குறித்த சில விவரங்களை இந்தியா வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்