மேற்குவங்கம்: கண்காணிப்பில் 2,028 வாக்குச்சாவடிகள்

1 mins read
f67555cb-f103-4868-aac6-d4f2701fb059
வாக்குச்சாவடிகள் தீவிரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  - கோப்புப்படம்: ஊடகம்

கோல்கத்தா: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 2,208 வாக்குச்சாவடிகளில் விநியோகிக்கப்பட்ட அனைத்துப் படிவங்களும் உரிய தகவல்களுடன் நிரப்பப்பட்டு திரும்ப வந்திருப்பது அதிகாரிகளை வியப்பிலும் சந்தேகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து, அந்த வாக்குச்சாவடிகள் தீவிரக் கண்காணிப்பின்கீழ் வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் ‘எஸ்ஐஆர்’ எனப்படும் ‘வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி’ நடைபெற்று வருகிறது. இதற்கான படிவங்களைத் திரும்ப வழங்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், வரும் 11ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், போலி வாக்காளர்கள் என ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டன. அந்த வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் 7.65 கோடி படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் முர்ஷிதாபாத், புருலியா, ஹவுரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 2,208 வாக்குச்சாவடிகளில் அனைத்துப் படிவங்களும் நிரப்பப்பட்ட நிலையில் திரும்பி வந்துள்ளன. இது சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்