மம்தா பதவி விலகாததால் மேற்கு வங்கச் சட்டமன்றம் கலைப்பு

மம்தா பதவி விலகாததால் மேற்கு வங்கச் சட்டமன்றம் கலைப்பு

1 of 2
படம்: இந்து தமிழ் திசை
படம்: ANI

08 May 2026 - 4:16 pm

2 mins read

கோல்கத்தா: முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் மேற்கு வங்கச் சட்டமன்றத்தை அந்த மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி கலைத்துள்ளார்.

மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாரதிய ஜனதா கட்சி 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.

திருவாட்டி மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 80 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

கடந்த மூன்று தவணைக் காலங்களில் அரசாங்கம் அமைத்த அக்கட்சி இம்முறை படுதோல்வியைச் சந்தித்தது.

ஆனால், மே 5ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திருவாட்டி மம்தா, “மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் தோல்வி அடையவில்லை. எங்கள் வெற்றி களவாடப்பட்டது. முதல்வர் பதவியிலிருந்து நான் விலகமாட்டேன்,” என்று தெரிவித்தார்.

இந்தச் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை (மே 7) வெளியிட்ட உத்தரவில், “மேற்கு வங்கச் சட்டமன்றம் மே 7ஆம் தேதி கலைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் மாநில ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அவரது உத்தரவின்பேரில் அரசிதழில் வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவை பதவியேற்பு

மேற்கு வங்கத்தின் 17வது சட்டமன்றம், கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பொறுப்பேற்றுக்கொண்டது.

தற்போது ஆளுநர் அதைக் கலைத்ததை அடுத்து, அண்மைய தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி அமைச்சரவை வரும் சனிக்கிழமை (மே 9) பதவியேற்கவிருக்கிறது.

அந்தக் கட்சி மேற்கு வங்கத்தில் அரியணை ஏறவிருப்பது இதுவே முதன்முறை. பதவியேற்பு நிகழ்ச்சி ‘பிரிகேட் பரேட்’ திடலில் நடைபெறும் என்று ‘த இந்து’ நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மம்தா பானர்ஜிமம்தாபதவி விலகல்சட்டமன்றம்கலைப்புமேற்கு வங்கம்ஆளுநர்