மேற்கு வங்கத்தில் முதற்கட்டத் தேர்தல் பிரசாரம் நிறைவு

மேற்கு வங்கத்தில் முதற்கட்டத் தேர்தல் பிரசாரம் நிறைவு

2 mins read
def65893-9ef7-4de7-9de8-c34e6b83d0d4
இறுதிக்கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள். - படம்: பிடிஐ

கோல்கத்தா: மேற்​கு ​வங்க மாநிலத்தில் சட்​டமன்றத் தேர்​தலுக்​கான முதற்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளது.

தமிழகத்தைப் போலவே மேற்கு வங்கத்திலும் செவ்வாய்க்கிழமை மாலையுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.

மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டத் தேர்தலில் மொத்தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்றுள்​ளனர்.

இம்முறை ஆளும் திரிணாமுல் காங்​கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

மேற்கு வங்கத் தேர்தலில் எப்போதுமே வன்முறைச் சம்பவங்களுக்குக் குறைவிருக்காது. அந்த வகையில், இம்முறையும் பல்​வேறு இடங்​களில் மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதைக் கவனத்தில் கொண்ட தேர்தல் ஆணையம், முதற்கட்டத் தேர்தலில் பாது​காப்​புப் படைகளைச் சேர்ந்த 2.4 லட்​சம் வீரர்​களைப் பாது​காப்புப் பணி​யில் ஈடு​படுத்தி உள்ளது.

தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் ஏப்ரல் 22 மாலை 6 மணி முதல் 23ஆம் தேதி காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்களின் போக்​கு​வரத்​துக்குத் தடை விதிக்​கப்​பட்டுள்​ளது.

‘ஐ-பேக்’ நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை

இதனிடையே, முதல்​வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் பிரசார ஆலோ​சனை​களை வழங்கி வரும் ‘ஐ-பேக்’ நிறுவனத்தின் கோல்கத்தா அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து, அடுத்த 20 நாள்களுக்கு அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு தனது ஊழியர்களுக்கு அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரசார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்​நிலை​யில் ‘ஐ-பேக்’ ஊழியர்​கள் வேலையிழக்க மாட்​டார்​கள் என்​றும் அனை​வருக்​கும் தங்​கள் கட்சி சார்பாக ஊதியம் வழங்​கப்படும் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அமித்ஷா உறுதிமொழி

இதனிடையே, மேற்கு வங்​கத்​தில் இறுதிகட்டப் பிரசாரத்தில் அனல் பறந்தது. மத்தியில் உள்ள பாஜக அரசை முதல்வர் மம்தா கடுமையாக விமர்சித்தார்.

சிலிகுரி பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்கத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராள​மானோர் சட்டவிரோதமாக ஊடுரு​வி​யுள்​ளதாகச் சாடினார்.

பாஜக ஆட்​சிக்கு வந்​தால், இத்தகைய ஊடுரு​வல்கள் தடுத்து நிறுத்​தப்படும் என்றும் ஊடுரு​வல்​காரர்​கள் இல்​லாத மாநில​மாக மேற்கு வங்​கம் மாற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

குறிப்புச் சொற்கள்