தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மேற்கு வங்கம்: மூன்றாவது நாளாகத் தொடர்ந்த மருத்துவர்கள் போராட்டம்

2 mins read
பதவி விலகத் தயார் என்கிறார் முதல்வர் மம்தா
7355d1b5-b258-4e62-a33b-a49e54e923d4
மேற்கு வங்க மாநிலத்தில் இளநிலை மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். - படம்: இந்திய ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்கத் தலைநகர் கோல்கத்தாவில் இளநிலை மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், மருத்துவர்களுக்குப் பாதுகாப்புக் கோரியும் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி முன்வந்தார். வியாழக்கிழமை (செப்டம்பர் 12) மாலை 5 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் பேச்சுநடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதை நேரடியாக ஒளிபரப்புச் செய்யவேண்டும் என மருத்துவர்கள் நிபந்தனை விதித்திருந்தனர்.

முதல்வர் மம்தா மாலை 5 மணிக்குத் தலைமைச் செயலகம் சென்றபோதும் போராட்டக்குழுவினர் யாரும் செல்லவில்லை.

மாலை 5.25 மணியளவில் அங்குச் சென்ற போராட்டக்காரர்கள் உள்ளே செல்லாமல், வாசலிலேயே நின்றுகொண்டு நேரடி ஒளிபரப்பு குறித்து வலியுறுத்தினர்.

தலைமைச் செயலாளர் மனோஜ் பந்த், காவல்துறைத் தலைவர் ராஜீவ் குமார் உட்பட உயரதிகாரிகள், முதல்வர் காத்திருப்பதை எடுத்துக்கூறிப் பேச்சு நடத்தினர்.

ஆனால் போராட்டக்காரர்கள் செவிசாய்க்காததால், ஏறக்குறைய இரண்டு மணி நேரம் காத்திருந்த முதல்வர் பின்னர் கிளம்பினார்.

பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால் போராட்டக்குழுவுடனான பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது. இருப்பினும் அதைப் பதிவு செய்து, உச்ச நீதிமன்றம் அனுமதித்தால் அந்தப் பதிவை அவர்களிடம் வழங்கத் தயார் என்று தெரிவித்தோம்,” என்றார்.

“கடந்த 33 நாள்களாக ஏராளமான அவமானங்களையும் பொய்க் குற்றச்சாட்டுகளையும் சகித்துக்கொண்டோம்,” என்றார் முதல்வர் மம்தா. நோயாளிகள் நலனுக்காகவும் மனிதநேய அடிப்படையிலும் இளநிலை மருத்துவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பார்கள் என்று கருதியதாகக் கூறிய முதல்வர் மம்தா, இந்த விவகாரத்தில் மக்கள் நலன் கருதித் தாம்பதவி விலகத் தயார் என்றும் கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தாமும் விரும்புவதாகவும் இத்தகைய போராட்டம் அதற்கான வழி அன்று எனவும் கூறினார்.

இந்தப் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அவர், பேச்சில் கலந்துகொள்ள வராதது, முதல்வரைக் காக்கவைத்தது ஆகியவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாது என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் கோல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இளநிலை மருத்துவர்கள் இரவிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

குறிப்புச் சொற்கள்