கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவின் வடக்குப் பகுதியில் இருக்கும் ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் பணியில் இருந்தப் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சனிக்கிழமையன்று (ஜனவரி 18) தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. கோல்கத்தா காவல்துறையில் பொதுத் தொண்டூழியராக இருந்த சஞ்சய் ரோய் என்பவர், முதுநிலை மருத்துவப் பட்டக் கல்வி மேற்கொண்டுவந்த பயிற்சி மருத்துவருக்குச் சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதியன்று பாலியல் வன்கொடுமை இழைத்து அவரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இப்போது அந்த வழக்கு விசாரணை தொடங்கி 57 நாள்கள் கழித்து தீர்ப்பளிக்கப்படவுள்ளது. சியால்டா நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்ட மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட மறுநாளான ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று காவல்துறையினர் முதலில் ரோயைக் கைது செய்தனர். அதன் பின்னர் கோல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கை மத்தியப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்தது. ரோய்க்கு மரண தண்டனை விதிக்குமாறு மத்தியப் புலனாய்வுப் பிரிவு கோரி வருகிறது.