மேற்கு வங்கக் கலவரம்: பங்ளாதேஷ் அறிக்கையை நிராகரித்தது இந்தியா

மேற்கு வங்கக் கலவரம்: பங்ளாதேஷ் அறிக்கையை நிராகரித்தது இந்தியா

படம்: இந்திய ஊடகம்

19 Apr 2025 - 4:12 pm

1 mins read

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை தொடர்பான பங்ளாதேஷ் வெளியிட்ட அறிக்கைகளை இந்தியா வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 18) நிராகரித்தது.

பொதுக் கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, பங்ளாதேஷ் தனது நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டங்களின் போது வன்முறை வெடித்தது.

இந்தக் கலவரத்தின் பின்னணியில் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்களும் இருப்பதாகத் தகவல் வெளியானது.

அத்துடன் பங்ளாதேஷ் கலவரத்தின்போது அந்நாட்டில் நடந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்தது போல் சித்திரிக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டன.

அதேநேரத்தில், மேற்கு வங்காளத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, அவர்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பங்ளாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசின் பேச்சாளர் ஷஃபிகுல் ஆலம் இந்தியாவை வலியுறுத்தினார்.

இந்நிலையில், “மேற்கு வங்காளத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து பங்ளாதேஷின் கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்று இந்திய வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

பங்ளாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகள் குறித்து இந்தியா கவலை தெரிவித்த நிலையில், இந்திய நாட்டின்மீது இதே போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கவனத்தை திசை திருப்ப முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்