கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த கலவரத்தில் ஒரே நேரம் 10 ஆயிரம் பேர் ஒன்று கூடினர்.
அத்துடன், காவல்துறை அதிகாரிகளின் ஆயுதங்களை அவர்கள் பறித்துக்கொண்டதாக உயர் நீதிமன்றத்தில் மாநில அரசின் அறிக்கை கூறியது.
நாடாளுமன்ற வக்ஃபு வாரிய சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்காள முர்ஷிதாபாத் நகரில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அரசு சொத்துகள், காவல்துறை வாகனங்கள், தனி நபர் வாகனங்கள் போன்றவை மீது தீவைக்கப்பட்டன. இதன் தொடர்பில் 150க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் மாநில அரசு 34 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கலவரம் எப்படி நடந்தது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதில், முர்ஷிதாபாத்தின் ஜாங்கிபூர் பகுதியில் 4 முதல் 5 ஆயிரம் பேர் அடங்கிய கும்பல் காவல் துறையைத் தாக்கி ஆயுதங்களைப் பறித்துச் சென்றது. பொதுப்பணித்துறை மைதானத்தில் சுமார் பத்தாயிரம் பேர் கூடினர். அவர்களில் 5 ஆயிரம் பேர் திடீரென தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோசமாக நடந்து கொண்ட அவர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டே காவல்துறையினர் மீது கற்களை வீசினர். இரும்புக் கம்பிகள், மரக்கட்டைகள், குச்சிகளாலும் தாக்கினர்.
அவர்களில் ஒருவன், துணைநிலை காவல்துறை அதிகாரியின் கைத்துப்பாக்கியைப் பறித்துச் சென்றான். இதன் பின்னர் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகை குண்டுகளை வீச வேண்டியதாயிற்று.
கோஸ்பாரா பகுதியில் இந்து குடும்பத்தினரின் வீடுகளை சூறையாடினர். ஜாப்ராபாத் நகரில் இருவர் கொல்லப்பட்டனர். இக்கலவரம் தொடர்பாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்று அறிக்கை விளக்கியது.