மேற்கு வங்க இரண்டாம் கட்டத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

மேற்கு வங்க இரண்டாம் கட்டத் தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

2 mins read
ccff47c4-e6be-47cb-9e10-103652dd30fe
இந்திய நேரம் மாலை 3 மணி நிலவரப்படி, 78.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாகத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. - படம்: ஏஎன்ஐ

கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 29) சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்திய நேரம் மாலை 3 மணி நிலவரப்படி, 78.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆக அதிகமாக, கிழக்கு பர்தமான் தொகுதியில் 83.11 விழுக்காடு வாக்குகளும் ஹூக்ளியில் 80.77, நாடியாவில் 79.79 விழுக்காடு வாக்குகளும் பதிவாயின.

இரண்டாம் கட்டமாக, 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 3.21 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் வாக்குப்பதிவுக்காக 41,000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக, 294 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்டமாக, கடந்த 23ஆம் தேதி 152 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் இதுவரை இல்லாத வகையில் 93.19 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் களத்தில் மத்திய படைகளும் தேர்தல் பார்வையாளர்களும் பாஜகவின் ஏவல்படிச் செயல்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகள் சிலவற்றை நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது இத்தேர்தலில் அதிகாரிகள் ஜனநாயக நெறிமுறைகளை முற்றிலுமாக மீறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

தேர்தல் என்ற ஜனநாயகத் திருவிழாவை பாஜகவினர் முழுமையாகச் சீரழித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், வன்முறை மூலம் முறைகேடுகளில் ஈடுபட பாஜக விரும்புவதாகச் சாடினார்.

இந்நிலையில் தெற்கு 24 பர்ஹானாஸ் மாவட்டத்தில் உள்ள பால்டா தொகுதியின் பல வாக்குச்சாவடிகளில், பாஜகவினர் வாக்களிக்க முடியாதபடி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ‘டேப்’ ஒட்டிவிட்டதாக பாஜக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜகவுக்கான பொத்தான் மீது அந்த டேப் ஒட்டப்பட்டு முறைகேடு நடந்துள்ளதால் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் நிர்வாகக் குறைபாடுகளால் வாக்குப்பதிவு மெதுவாக நடைபெறுகிறது என பெலேகட்டா சட்டமன்றத் தொகுதியின் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் குணால் கோஷ் அதிருப்தி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்